'எங்களுக்கும் சேர்த்து உணவு வாங்கினார்' – உக்ரைனில் உயிரிழந்த நவீனின் கடைசி நிமிடங்களை விவரிக்கும் நண்பர்

பெங்களூரு: உக்ரைனில் ரஷ்ய படையினரின் குண்டு வீச்சில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் கடைசி நிமிடங்களை அவருடன் தங்கியிருந்த சக இந்திய மாணவர் ஒருவர் விவரித்துள்ளார்.

உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா (வயது 21) என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் அவர். நவீன் சேகரப்பா ஒரு மளிகைக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அவர் குண்டு வீச்சில் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என தகவல் வெளியானது. இதனை மத்திய அரசும் உறுதி செய்தது. அவரின் உயிரிழப்பால் இந்தியா சோகத்தில் மூழ்கியுள்ளது. இதனிடையே, நவீனின் கடைசி நிமிடங்கள் தொடர்பாக அவருடன் தங்கியிருந்த மாணவர்கள் பேசியுள்ளனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் சென்னகெளவுடா என்ற மாணவர் பிபிசி-க்கு அளித்த பேட்டியில், “இங்கு பிற்பகல் 3 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு முடிந்ததும் உணவுப்பொருட்களை வாங்குவதற்காக நவீன் வெளியே சென்றார். எங்களுக்கும் சேர்த்து அதிக உணவு வாங்க எண்ணிய அவரிடம் போதுமான பணம் இல்லை. இதையடுத்து என்னிடம் பணத்தை அனுப்பிவிட சொன்னார். நவீன் கேட்டபடி, அவனது மொபைலுக்கு பணத்தை மாற்றிய சில நிமிடங்களுக்கு பிறகு, அவரை தொடர்புகொண்டேன். ஆனால், என் அழைப்புகளை எடுக்கவில்லை. பல முறை முயற்சித்தும் பலனில்லை.

சில மணி நேரங்களுக்கு பிறகு எனது அழைப்புக்கு நவீன் போனில் இருந்து வேறு யாரோ பதில் கொடுத்தனர். பதில் பேசியவர் உக்ரைன் மொழியில் பேசினார் என்பதால் எனக்கு அவர் சொன்னது புரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் இருந்த உக்ரைனியர் ஒருவரிடம் அவரை பேசவைத்தோம். அவர்தான், நவீன் உயிருடன் இல்லை என்பதை எங்களுக்குத் தெரிவித்தார்.

எங்களால் இதனை நம்ப முடியவில்லை. உடனே நாங்கள் அருகில் உள்ள கடைக்குச் சென்று பார்த்தோம். நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பக்கத்தில் தான் கடை உள்ளது. ஒரு சில அடிகளே இருக்கும் அது. அங்கு குண்டு வெடித்ததற்கான எந்த தடயங்களும் இல்லை. நாளை காலை மொத்தமாக இங்கிருந்து வெளியேறலாம் என்று நினைத்தே இங்கேயே இருந்தோம்” என்று விவரித்துள்ளார்.

நவீன் இறப்பதற்கு சில மணிநேரங்கள் முன்பு தான் தனது தந்தையுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது கார்கிவ் நகரில் நிலைமை மோசமாக இருப்பதால் வசிப்பிடத்தை விட்டு வெளியேறவில்லை என்பதை நவீன் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். பதிலுக்கு நவீனின் தந்தை சேகரப்பா, “உங்களிடம் இந்திய கொடி இருந்தால் நீங்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தின் மீது வையுங்கள். அல்லது நீங்கள் இருக்கும் கட்டிடத்திற்கு வெளியே கொடியை காட்டுங்கள், உங்களால் முடிந்தவரை அதை செய்யுங்கள். அனைவரும் ஒன்றாக இருங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார். இப்படி பேசிவிட்டு வைத்த சில மணி நேரங்களில் நவீன் இறந்த செய்தி தான் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.