தி.மு.க. தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்- நீண்ட வரிசையில் வந்து பரிசுகள் கொடுத்தனர்

சென்னை:
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு இன்று 69-வது பிறந்தநாள். இதையொட்டி அவரது பிறந்த நாளை தி.மு.க.வினர் தமிழர் எழுச்சி நாளாக எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை வீட்டில் இன்று காலையில் எழுந்ததும் தனது தந்தையான மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
அப்போது மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரன், பேத்திகள் அனைவரும் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். அதன் பிறகு மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களுக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வைத்து வணங்கினார்.
மறைந்த பேராசிரியர் அன்பழகனின் வீட்டுக்கும் சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு மு.க.ஸ்டாலின் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை வீட்டு வாசலில் உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
கோபாலபுரம் வீட்டுக்குள் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அவரது காலை தொட்டு வணங்கினார்.
அதன்பிறகு கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து சி.ஐ.டி. காலனிக்கு சென்றார். அங்கு அவரை கனிமொழி எம்.பி. வாசலில் நின்று வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
அங்கு கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். கனிமொழி எம்.பி.யும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார். சிறிது நேரம் அங்கிருந்த மு.க.ஸ்டாலின் அதன்பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
பின்னர் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட தொடக்க விழாவில் பங்கேற்க சென்றார். இந்த விழாவில் சிறப்புரையாற்றி முடித்ததும் அண்ணா அறிவாலயம் சென்றார்.
அங்கு அறிவாலய வாசலில் அவருக்கு கட்சி நிர்வாகிகள், திண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘தளபதி வாழ்க’ என்று விண்ணதிர முழக்கமிட்டனர்.
அண்ணா அறிவாலயத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் வந்திருந்ததால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. வழிநெடுக நின்றிருந்த தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டே அண்ணா அறிவாலயத்துக்குள் மு.க.ஸ்டாலின் நுழைந்தார்.
அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்று அங்குள்ள கலைஞர் அரங்கிற்கு அழைத்து சென்றனர். அங்கு திரளாக திரண்டிருந்த கட்சித்தொண்டர்களும், நிர்வாகிகளும் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் உற்சாக மிகுதியில் ‘தளபதி வாழ்க’ என்று முழக்கமிட்டனர்.
அவர்களை பார்த்து கையசைத்த மு.க.ஸ்டாலின் வரிசையாக ஒவ்வொருவரையும் அருகே அழைத்து வாழ்த்து பெற்றார். அவர்கள் வழங்கிய சால்வைகள், புத்தகங்கள், பழக்கூடைகளையும் பெற்றுக் கொண்டார்.
மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கு கட்டுக் கடங்காத கூட்டம் காணப்பட்டதால் அவர்களை கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.
மு.க.ஸ்டாலினுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தொண்டர்கள், நிர்வாகிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய் தீன், புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி, திருநாவுக்கரசர் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள், பலரும் அறிவாலயம் வந்து மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.