அருமையான கூட்டம்: ஜெய்சங்கர் தலைமையிலான ஆலோசனை குறித்து சசி தரூர் கருத்து

உக்ரைன் மீது ரஷியா கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 8-வது நாளாக தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களை பிடிக்க ஆக்ரோசமாக தாக்குதல் நடத்தி வருவதால் கார்கிவ், கீவ் நகரில் உள்ள இந்தியர்கள், மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் இந்திய அரசு பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய மாணவர் ஒருவர் கார்கிவில் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்டார்.
இதற்குமேலும், இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க துரிதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த மத்திய மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் 21 பேர் கொண்ட ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 6 கட்சிகளை சேர்ந்த 9 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, சசி தரூர், ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப்பின் சசி தரூர் கூறுகையில் ‘‘இது சிறந்த ஆலோசனை கூட்டம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஜெய்சங்கர் மற்றும் அவரது குழுவினர் எங்களுடைய கேள்வி மற்றும் கவலைகளுக்கு சுருக்கமாக தெளிவாக பதில் அளித்ததற்கு நன்றி’’ எனத் தெரிவித்தள்ளார்.
ராகுல் காந்தி ‘‘மோடியின் பங்கு செயலில் காணவில்லை’’ என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். மாணவர் ஒருவர் உயிரிழந்த பின், ‘‘இதுபோன்ற பெரும்துயர சம்பவத்தை தவிர்க்க, மத்திய அரசு எவ்வளவு மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர். மாகாணம் வாரியாக வெளியேற்றுவதற்கான திட்டம் குறித்து வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
சசி தரூர் ஏற்கனவே ‘‘ஒரு நாடு மற்றொரு நாடு மீது போர் தொடக்க ஆதரவு கிடையாது என்பதே நமது நிலை. அதேபோல் வன்முறை மற்றும் போர் மூலம் ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவு கிடையாது என்பதும் நமது நிலைப்பாடு. ஐ.நா. சபை வாக்கெடுப்பை புறக்கணித்ததன் மூலம் வரலாற்றின் தவறாக பக்கம் தானாகவே சென்றுவிட்டது’’ எனக் கூறியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.