உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்துவர 130 பேருந்துகள் தயார்- ரஷியா தகவல்

உக்ரைன் மீதான ரஷியா தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே குண்டு வெடிப்பு, ஏவுகணை உள்ளிட்ட தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருவதால் அங்கு வசிக்கும் உள் மற்றும் பிற நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர்.
லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். மேலும், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போரினால் உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரை வெளியேற்ற ரஷியா 130 பேருந்துகளை அனுப்பத் தயாராக உள்ளது என்று ரஷிய உயர்மட்ட இராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேசி உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து விவாதித்தார். உக்ரைனை விட்டு வெளியேறும் இந்தியர்களுக்கு உதவ ரஷியா அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக கிரெம்ளின் தெரிவித்தது. இதையடுத்து, ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கர்னல் ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவின் 130 பேருந்துகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்னல் ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் கூறியதாவது:-

இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாட்டு குடிமக்களை மீட்பதற்காக இன்று காலை 6 மணி முதல் பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள நெகோடெயேவ்கா மற்றும் சுட்ஷா சோதனைச் சாவடிகளில் இருந்து கார்கீவ் மற்றும் சுமி நகரங்களுக்கு மொத்தம் 130 பேருந்துகள் புறப்படத் தயாராக உள்ளன.

இதைத்தவிர, சோதனைச் சாவடிகளில் தற்காலிக தங்குமிடம் மற்றும் ஓய்வுக்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அகதிகளுக்கு சூடான உணவு வழங்கப்படும். நடமாடும் கிளீனிக்குகளும் அங்கு மருந்து கையிருப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பின்னர் ரஷிய ராணுவ விமானங்கள் உள்பட விமானங்கள் மூலம் தங்கள் தாய்நாட்டிற்கு புறப்படுவதற்காக பெல்கொரோட் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
உக்ரைன் போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்படும் சீனா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.