உக்ரைனின் அணு உலை மீது ரஷ்ய படையினர் தாக்குதல்| Dinamalar

கீவ்:உக்ரைனின் மிகப் பெரிய அணு உற்பத்தி நிலையத்தின் மீது, ரஷ்ய படையினர் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், முதலாம் எண் அணு உலை உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனாலும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதாக உக்ரைன் தரப்பினர் தெரிவித்தனர்.

இந்த அணு உற்பத்தி நிலையத்தை, ரஷ்ய படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளான ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

தொடர் குண்டு மழை

உக்ரைனின் எனர்ஹோதார் நகரில் உள்ள ஸாபோர்ஸியா என்ற இடத்தில், அந்நாட்டின் மிகப்பெரிய அணு உற்பத்தி நிலையம் உள்ளது. இந்நகர் மீது ரஷ்ய படையினர் நேற்று முன்தினம் இரவு தாக்குதலை தீவிரப்படுத்தினர். பீரங்கிகள் தொடர் குண்டு மழை பொழிந்தபடி இருந்தன. இந்த தாக்குதலில், ஸாபோர்ஸியா அணு உற்பத்தி நிலையத்தின் ஒன்றாம் எண் அணு உலை உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தாக்குதலில், உக்ரைனைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்; இருவர் காயம் அடைந்தனர்.இது குறித்து அணு உற்பத்தி நிலையத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி டஸ் கூறுகையில், ”இங்கு மொத்தமுள்ள ஆறு அணு உலைகளில், ஒரு உலை உள்ள பகுதியில் குண்டுகள் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த உலை புதுப்பிக்கப்பட்டு வருவதால் இது பயன்பாட்டில் இல்லை,” என்றார்.

தீ விபத்து ஏற்பட்ட அணு உலை உள்ள பகுதியில் நேற்று காலையில் கதிர்வீச்சு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ‘கதிர்வீச்சு அளவில் மாற்றமில்லை’ என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அணு உலை மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை, பிரிட்டர் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட்டி உள்ளார்.

முன்னெச்சரிக்கை

இதற்கிடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விபரம் கேட்டறிந்தார். முன்னெச்சரிக்கையாக அமெரிக்க எரிசக்தி துறை, தங்களின் அணு உற்பத்தி நிலைய விபத்து படையினரை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கருங்கடல் பகுதியை ஒட்டியுள்ள உக்ரைனின் துறைமுக நகரான மிக்கலேவில், ரஷ்ய படைகள் நேற்று கடுமையாக தாக்குதல் நடத்தின. ஏவுகணைகளை ஏவி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், நகரின்முக்கிய கட்டடங்கள் சேதமடைந்தன. பல மணி நேர தாக்குதலுக்குப் பின், ரஷ்ய படைகள் நேற்று மிக்கலேவ் நகருக்குள் ஊடுருவின. அவர்களை எதிர்த்துஉக்ரைன் ராணுவத்தினர் தீவிர மாக சண்டையிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.