மேலூர் மாணவியின் தாயாருக்கு இழப்பீடும், வேலையும் அரசு வழங்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: மேலூர் அருகே தும்பைப்பட்டி மாணவியின் தாயாருக்கு அரசு இழப்பீடும், வேலையும் வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரை மாவட்டம். தும்பைப்பட்டியில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி சபரி (40) தேநீர் கடை நடத்தி வரும் ஆதரவற்றவர். இவர் மனநிலை பாதிக்கப்பட்ட கணவரையும், இரு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார். இவரது மகள் 17 வயது சிறுமியை, கடந்த 14. 02.2022ஆம் தேதி நாகூர் அனிபா என்பவர் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

இருவரும் வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் தாயார் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கிடையில் ஈரோட்டில் அனிபாவின் உறவினர் வீட்டில் இருந்த சிறுமிக்கு எலி மருந்து கொடுத்துள்ளனர். இதனால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியை அனிபாவின் தாயார், சபரியிடம் கொண்டு போய் சேர்த்துள்ளார்.

சிறுமியின் உடல் நலம் மேலும் மோசமடைந்த நிலையில் சிறுமியின் தாயார் அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி மரணமடைந்துள்ளார். சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவுகள் மற்றும் கொலைக்குற்றம் புரிதல் உள்ளிட்ட பல கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அனிபா, அவரது பெற்றோர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டனை பெற்று தரும் வகையில் வழக்கை நடத்த வேண்டும். பெற்ற மகளை இழந்து நிற்கும் சபரி வாழ்க்கை புயலில் சிக்கிய துரும்பாக படாத, பாடு படுகிறது. அவரது மனநிலை பாதித்த கணவரையும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகனையும் பாதுகாப்பதற்கு அரசு ஆதரவுக் கரம் நீட்டி உதவ வேண்டும்.

பள்ளிக் கல்வி பெறும் மகன் சந்தோஷின் கல்விச் செலவு முழுமையும் அரசு ஏற்க வேண்டும். மகளை இழந்து நிற்கும் சபரிக்கு இழப்பீடு வழங்குவதுடன், அவரது கல்வித் தகுதிக்கு தக்கபடியான அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.