இந்தியா- இலங்கை இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

பெங்களூரு:
இந்தியா-இலங்கை அணிகள் இடையே மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான  2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. 
2வது டெஸ்ட், பகல்-இரவு போட்டியாக நடைபெறுவதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, பிங்க் பந்து டெஸ்ட் கிரிக்கெட் (பகல்-இரவு) போட்டியில் எத்தகைய அணுகுமுறை தேவை என்பது குறித்து இன்னும் நாங்கள் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
பீல்டிங்கின் போது பிங்க் பந்து வித்தியாசமாக தோன்றும், நீங்கள் நினைத்ததை விட பந்து வேகமாக கைக்கு வந்து விடும். 
வழக்கமான டெஸ்ட் போட்டியில் காலையில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். ஆனால் பகல்-இரவு டெஸ்ட் பிற்பகலில் தொடங்குவதால் அந்த சமயத்தில் பந்து பெரிய அளவில் ஸ்விங் ஆகாது. ஆனால் மாலைப்பொழுதில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்ய முடியும். 
இது போன்ற விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்து இருக்கிறோம். நாங்கள் அதிகமான பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. இதுவரை கிடைத்துள்ள அனுபவங்களை பகிர்ந்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க முயற்சிக்கிறோம். ஆடுகளத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப களம் இறங்கும் அணியை முடிவு செய்வோம். இவ்வாறு பும்ரா கூறினார்.
 
இந்தியாவில் நடைபெறும் 3-வது பகல்-இரவு டெஸ்ட் இது. இதற்கு முன்பு நடந்துள்ள இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், இந்த டெஸ்ட்டிலும் நமது வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.