"தல" ஜெயிச்சிருச்சு.. "கை" தோத்துப் போச்சே.. கவலையில் யோகி!

உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, நல்ல வெற்றியைப் பெற்றது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவரது வலதுகரமான துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளர்யா தோல்வியுற்றது அவரது சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

யோகி ஆதித்யநாத்
உ.பியில் புதிய வரலாறு படைத்துள்ளார். 2வது முறையாக அவர் முதல்வராகிறார். பாஜகவுக்கு எதிராக, ஆட்சிக்கு எதிராக பல விஷயங்கள் எழுப்பப்பட்டாலும் கூட அதையெல்லாம் தாண்டி பாஜகவை ஜெயிக்க வைத்திருக்கிறார் யோகி ஆதித்யநாத். ஆனால் அவரது வலதுகரமாக கருதப்பட்ட துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளர்யா தோற்றுப் போய் விட்டார்.

உத்தரப் பிரதேச அமைச்சரவையில் யோகிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் மெளர்யா. அவரது தோல்வி பாஜகவுக்கு சற்று வருத்தத்தைக் கொடுத்துள்ளது. சிராது தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டணிக் கட்சியான அப்னாதளம் (கமேரவாதி) கட்சியின் பல்லவி படேல், மெளர்யாவை 7000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

இத்தனைக்கும் மிகப் பிரமாண்டமான முறையில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் மெளர்யா. பணத்தை தண்ணீராக இறைத்தார். பிரதமர் நரேந்திர மடோி, மத்திய அமைச்சர்கள் அமீத் ஷா, நிதின் கத்காரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, எதிர் வேட்பாளர் பல்லவி படேலின் சகோதரியும், பாஜக கூட்டாளியுமான அனுப்பிரியா படேல் ஆகியோரும் கூட பிரசாரம் செய்திருந்தனர். இத்தனை செய்தும் கூட மெளர்யா தோற்றுப் போய் விட்டார்.

ஆரம்பத்தில் மெளர்யா முன்னிலையில்தான் இருந்தார். இதனால் உற்சாகத்தில், மக்களுக்கு வெற்றி, குண்டர்களுக்குத் தோல்வி என்று கூட டிவீட் போட்டிருந்தார். ஆனால் போகப் போக அவர் பின்னடவை சந்திக்க ஆரம்பித்து விட்டார். கடைசியில் தோற்றும் போய் விட்டார்.

மெளர்யா மட்டுமல்லாமல், மேலும் 10 அமைச்சர்களும் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். இந்தத் தேர்தலில் இன்னொரு துணை முதல்வரான தினேஷ் சர்மா போட்டியிடவில்லை. இதனால் யோகியின் அடுத்த அமைச்சரவையில் அவருக்குத் துணை முதல்வர்களாக இருக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எம்.எல்.சி ஆகி அதன் மூலம் மீண்டும் துணை முதல்வராகும் வாய்ப்பு மெளர்யாவுக்கு உள்ளது. ஆனால் யோகி அதைச் செய்வாரா என்று தெரியவில்லை. அவருக்குப் பதில் வேறு ஒருவரை தனது வலது கரமாக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் யோகியே கூட நேரடியாக போட்டியிடவில்லை. மாறாக எம்எல்சி ஆகித்தான் அவர் முதல்வர் பதவியில் அமர்ந்தார். இந்த முறைதான் அவர் கோரக்பூர் அர்பன் தொகுதியில் போட்டியிட்டார். முதல் போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் உ.பியில் எந்தக் கட்சியும் தொடர்ச்சியாக 2வது முறை ஆட்சியமைத்ததில்லை. அந்த வரலாற்றை பாஜக மாற்றியமைத்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.