நீலகிரி பெண் கைவினைக் கலைஞர்களுக்கு கிடைத்த விருதால் தோடர் இன மக்களுக்கு கிடைத்த கூடுதல் கவுரவம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இன கைவினைக் கலைஞர்கள் 2 பேருக்கு ‘நாரி சக்திபுரஸ்கார்’ விருது வழங்கப்பட்டுஉள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தொழில்முனைவோர், விவசாயம், சமூகப் பணி, கல்வி மற்றும் இலக்கியம், மொழியியல், கலை மற்றும்கைவினை அறிவியல், தொழில்நுட்பம், மாற்றுத் திறனாளிகள் உரிமை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘நாரி சக்திபுரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது.

பூத்துக்குளி எம்ப்ராய்டரி

சர்வதேச பெண்கள் தினத்தைஒட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 29 பெண்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவித்தார். தமிழக பெண்கள் 3 பேருக்கு ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது.

இவர்களில் நீலகிரி மாவட்டம் பெட்டுமந்து கிராமத்தில் வசிக்கும் தோடர் இனத்தைச் சேர்ந்த எம்ப்ராய்டரி கைவினைக் கலைஞர்கள் ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோர் கூறும்போது, ‘‘பழங்காலத்தில் எங்களதுபாரம்பரிய ஆடையான பூத்துக்குளி உடையில் எம்ப்ராய்டரி செய்து வந்தோம். 2003-ம் ஆண்டுமுதல் சுயஉதவிக்குழு அமைத்து,குழுவாக பாரம்பரிய எம்ப்ராய்டரியுடன் (தையல் வேலைபாடு) சால்வை, மப்ளர், பைகள், தோல்பைகள் ஆகியவற்றை பூ வேலைப்பாடுகளுடன் தயாரித்து வருகிறோம்.

புவிசார் குறியீடு

மகளிர் திட்டம் மற்றும் சமூக நலத் துறை மூலம் பல்வேறு இடங்களில் கண்காட்சி நடத்தி, எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம். இந்த விருது காரணமாக தோடர் இன மக்களுக்கு கவுரவம் கிடைத்துள்ளது’’ என்றனர்.

இது குறித்து, நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கச் செயலாளர் ஆல்வாஸ் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இனப் பெண்களின் பாரம்பரிய தையல் கலையான எம்ப்ராய்டரி உலகப் பிரசித்திப் பெற்றது. தோடர் இன மக்களின் எம்ப்ராய்டரிக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது சிறப்பம்சமாகும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.