3வது நாளில் ஆட்டத்தை முடித்தது… இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

பெங்களூரு:
இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் இந்தியா முதல் நாளில் இருந்தே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. முதல்  இன்னிங்சில் இந்தியா 252 ரன்களும், இலங்கை 109 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2ம் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, 2வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அதேசமயம் நங்கூரம் போன்று நீண்ட நேரம் களத்தில் நின்ற கேப்டன் கருணாரத்ன 107 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். ஆனால் அவரது சதம் வீணானது. மறுமுனையில், குஷால் மெண்டிஸ் (54) தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். எனவே, இலங்கை அணி 208 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. 
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். பும்ரா 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.