சரக்கு வாகனத்தில் மாணவ – மாணவியரை தேர்வெழுத அனுப்பிய பிரின்ஸ்பால்

பெங்களூரு-அரசு வழங்கிய நிதியை தவறாக பயன்படுத்திய பிரின்ஸ்பால், தேர்வெழுத சென்ற மாணவ — மாணவியரை விலங்குகள் போன்று, சரக்கு வாகனத்தில் ஏற்றியனுப்பியது தெரிய வந்துள்ளது.உறைவிட பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவியரின் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவ சிகிச்சைக்காக, மாநில அரசு தாராளமாக நிதியுதவி வழங்குகிறது. சில பள்ளிகளில் இந்த நிதி நல்ல முறையில் பயன்படுத்தப்படுகிறது.துமகூரு கொரட்டகரேவின் பைஜாபுரா அருகில், மொரார்ஜி உறைவிடப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் பிரின்ஸ்பால், அரசு வழங்கும் நிதியுதவியை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இப்பள்ளியின் 72 பி.யு.சி., மாணவர்கள் சில நாட்களுக்கு முன், சோதனை முறை தேர்வெழுத, 16 கி.மீ., தொலைவிலுள்ள, அரசு கல்லுாரிக்கு செல்ல வேண்டியிருந்தது. இவர்களை பயணியர் வாகனத்தில் அழைத்து சென்று, வருவது பிரின்ஸ்பாலின் பொறுப்பாகும். ஆனால் இவர் சரக்கு வாகனத்தில் 37 மாணவியர், 35 மாணவர்களை ஏற்றி உறைவிட பள்ளியிலிருந்து கல்லுாரிக்கு அனுப்பினார்.சிறிய சரக்கு வாகனத்தில் ஆடு, மாடுகள் போன்று நின்று கொண்டு சென்றனர். இந்த காட்சியை சிலர் கவனித்து, மொபைலில் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வாகனம் திடீர் பிரேக் போட்டாலோ, நிலை தடுமாறி உருண்டாலோ மாணவ – மாணவியரின் கதி என்ன என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.கொரட்டகரேவின் பெரும்பாலான உறைவிட பள்ளிகள் பட்டணம், கிராமங்களின் புறநகரில் உள்ளது.அங்கில்லாத அவலநிலை பைஜாபுரா உறைவிட பள்ளியில் உள்ளது. இப்பள்ளி பிரின்ஸ்பால் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நாட்களில் வேறொரு பள்ளியிலும் இது போன்று நடக்கும். எனவே பிரின்ஸ்பால் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தல் எழுந்துள்ளது.சமூக நலத்துறை துணை இயக்குனர் பிரேமா கூறுகையில், ”இது தொடர்பாக விளக்கம் கேட்டு உறைவிட பள்ளி பிரின்ஸ்பாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இது போன்று நடந்தால், நடவடிக்கை எடுப்பதாக மாவட்டத்தின் அனைத்து உறைவிட பள்ளி பிரின்ஸ்பால்களுக்கு உத்தரவிடப்படும்,” என்றார்.பைஜாபுரா உறைவிட பள்ளியில், 72 மாணவ – மாணவியரை சிறிய சரக்கு வாகனத்தில், 16 கி.மீ., தொலைவில் உள்ள கல்லுாரிக்கு தேர்வெழுத அனுப்பியது, என் கவனத்துக்கு வந்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. நானே அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்துவேன்.- நாஹிதா ஜம்ஜம், தாசில்தார், கொரட்டகரே

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.