புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் எந்தத் தடையும் கிடையாது

புலம்பெயர் அமைப்புக்கள்  இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. முதலிடுவதற்கான வாய்ப்புக்களைப் வழங்க சமகால அரசாங்கம் தயாராகவுள்ளது என்று வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்று கூறுபவர்கள் அதற்கான விடயங்கள் தெளிவாக முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ,புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தால் அதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று ‘சவால்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துக்கொண்ட பொழுது  குறிப்பிட்டார்.

வட மாகாண மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் பொது சேவைகள் அமைச்சுகள் 5 காணப்படுகின்றன. அதில் 45 ஆயிரம் அரச பணியாளர்கள் உள்ளனர். இதற்கு மேலதிகமாக புதியதொரு வழிமுறையை கையாண்டு வட மாகாணத்திலுள்ள ஒவ்வொரு  மாவட்டங்களிலும் அரசாங்க அதிபர் அலுவலகத்தின் ஊடாக நடமாடும் சேவையினை மேற்கொண்டு மக்களின் நிலைமை மற்றும் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வினை வழங்கி வருகின்றோம். பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் விஷேட பேச்சுவார்த்தையொன்று நடைபெறவிருப்பதாக குறிப்பிட்ட அவர், அபிவிருத்தி நடவடிக்கைகளில்  எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் அதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் மேற்கொள்ளப்படவதாகவும் தெரிவித்தார்.

172 ஆயிரம் சமுர்த்தி பெறுவோர் எமது மாகாணத்தில் உள்ளனர். இவர்களுக்கு தேவையான காணி வசதிகளை அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இத்திட்டத்தை ஒரு நாளில் செய்ய முடியாது. இருப்பினும், குறித்த அமைச்சுக்களுடன் கலந்தாலோசித்து மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியதோடு, காணி பிரச்சினை மற்றும் மக்களின் பொருளாதார பிரச்சினைகள் பற்றிய கடிதங்கள், வாட்சப் செய்திகள் எமக்கு அதிகமாக வருகின்றன. அவ்வாறு வருகின்ற பிரச்சினைகளுக்கு சரியானதொரு தீர்வை 3 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் கூறினார்.
 
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என்பவற்றில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. உயர்தர கல்வியை ஆங்கில மொழி மூலம் தொடரலாம். இருப்பினும், ஓரிரு பாடசாலைகளிளேயே இதற்கான வசதிகள் உள்ளன. அவற்றை அதிகரிக்க வேண்டும். ஏனெனில், பல்கலைக்கழகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆங்கில அறிவு அவசியமாகும். யாழ் மாகாணத்தில் இவ்வாறான அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

இதேவேளை ,யாழ் மாகாணத்தை பொறுத்த மட்டில் சுற்றுலா, வியாபாரம், விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில்  முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவோருக்கு தேவையான அனைத்து வசதிகளையும், சந்தர்ப்பத்தையும் வழங்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

வட மாகாணத்தில் 1.26 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்களுக்கான பொது சேவைகளை வழங்குவதற்கு 1,600 அரச ஊழியர்கள் உள்ளனர். பொது மக்கள் சந்திப்பில் மக்கள் எங்களை சந்தித்து அவர்களின் குறைபாடுகளை தெரிவிக்கும் முதல் நாங்கள் அவர்களிடத்திற்கே சென்று பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுக்கான தீர்வினை வழங்க முயற்சித்து வருகின்றோம். இது தான் சரியானதொரு அரச சேவையாகும். இனி வரும் காலங்களில் மக்களுக்கான உணவு மற்றும் குடிநீரை நிறைவாக வழங்குவதே எமது முக்கிய குறிக்கோளாகும் என்று ஆளுநர் கூறினார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.