காதுகளுக்கு ஹேப்பி நியூஸ்… கொரோனா காலர் டியூனை நிறுத்தப் போகிறது அரசு!

கடந்த 2 வருடங்களில் செல்போன் பயன்பாட்டாளர்களை அதிக அசவுகரியத்துக்குள்ளாக்கியது எது என்றால் அது கொரோனா காலர் ட்யூன்தான். தற்போது அந்த காலர் ட்யூனை நிறுத்தி விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில் கொரோனாவைரஸ் பரவல் தொடங்கியதுமே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் தவிர பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அது எடுத்தது. அப்படி எடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஒன்றுதான்
கொரோனா காலர் ட்யூன்
.

செல்போன்களில் அழைப்பு வந்தால் இந்த காலர் ட்யூன்தான் முதலில் நமது காதுகளை வரவேற்கும். கொரோனா விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய இந்த காலர் ட்யூன் மக்களிடையே வேகமாக பிரபலமானது அதேசமயம், மக்களின் அதிருப்தியையும் வாரிக் குவித்தது. இந்த காலர் ட்யூன் சரியாக இல்லை, பீதியூட்டுவது போல இருக்கிறது. எரிச்சல் ஊட்டுகிறது. இப்படியெல்லாம் விழிப்புணர்வு ஊட்டக் கூடாது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவசரமாக கால் செய்தால் இந்த விழிப்புணர்வு செய்தியே ரொம்ப நேரம் ஓடுவதும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இருந்தாலும் மத்திய அரசு இந்த காலர் ட்யூனை நிறுத்துவில்லை. இன்று வரை அது தொடர்கிறது. இந்த நிலையில் மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு கொரோனா கால கட்டுப்பாடுகளை நிறுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் இருக்காது. இதையடுத்து கூடவே இந்த காலர் ட்யூனையும் மத்திய அரசு கைவிடலாம் என்று கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் நடிகர் அமிதாப் பச்சன் குரலில்தான் இந்த கொரோனா காலர் ட்யூன் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு பெண்ணின் குரலில் இந்த மெசேஜ் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த காலர் ட்யூனை வாபஸ் பெறலாம் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை, சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாம். இந்திய செல்போன் பயன்பாட்டாளர்கள் சங்கத்திடமிருந்து இதுதொடர்பாக வந்துள்ள கோரிக்கையை சுட்டிக் காட்டி தொலைத் தொடர்புத்துறை தனது கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளதாம்.

இதையடுத்து இந்த காலர் ட்யூனை திரும்பப் பெறுவது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் பரிசீலனையில் இறங்கியுள்ளனராம். அதேசமயம், பிற விழிப்புணர்வுப் பிரசாரங்களை தொடர்ந்து மேற்கொள்ள சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாம்.

ஜஸ்லீன் பல்லா என்ற பெண்தான் இந்த கொரோனா காலர் ட்யூனில் ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் ஆவார். The entire country is fighting against coronavirus, but remember we have to fight the disease, not the patient என்ற செய்தியைச் சொன்னவர் அவர்தான். தனது வீட்டிலிருந்தபடி, தனது செல்போனில் இந்த செய்தியை பதிவு செய்து அவர் அனுப்பினார். இது பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் என்று அப்போது அவருக்குத் தெரியாதாம். ஆனால் நாடு முழுவதும் செல்போன்களில் இவரது குரல் ஒலிக்க ஆரம்பித்த பிறகுதான் அவருக்கு இந்த செய்தியின் நோக்கம் புரிந்ததாம்.

கடந்த 10 வருடமாக இவர் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்டாக இருந்து வருகிறார். டெல்லி மெட்ரோ, ஸ்பைஸ்ஜெட், இன்டிகோ உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்கள் இவரது குரலைப் பயன்படுத்தியுள்ளன. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவரது குரலைத்தான் நாம் கேட்டு வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திவீடு தேடி வரும் ரேஷன் – குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.