தன்பாலின உறவு: யாருக்கு மனநல ஆலோசனை தேவை?

சர்ச்சைக்குரிய, ‘காஷ்மீ்ர் பைல்ஸ்’ படத்தின் இயக்குநர்
விவேக் அக்னிஹோத்ரி
அண்மையில் கூறிய கருத்தும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், “நான் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவன்தான். ஆனால், அதை யாரிடமும் சொல்வதில்லை. ஏனென்றால், போபாலைச் சேர்ந்தவர்கள் என்றாலே பொதுவாக தன்பாலின உறவாளர்கள் என்ற கருத்து இருக்கிறது. ஒருவேளை, அவர்களின் நவாபி ஸ்டைல் வாழ்க்கை முறையால்கூட அதுபோன்ற எண்ணம் வந்திருக்கலாம்” என்றார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், “விவேக் அக்னிஹோத்ரி, நீங்கள் சொல்வது உங்கள் சொந்த அனுபவமாக இருக்கலாம். ஆனால், அனைத்து போபால்வாசிகளுக்கும் அது பொருந்தாது. உங்களுடன் இருக்கும் நபர்களைப் பொறுத்துக்கூட இந்த எண்ணம் உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். இனி எச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள்” என்றார் ஆவேசமாக.

ஆக, இருவருமே
தன்பாலின உறவு
என்பதை இழிவானதாகப் பார்க்கிறார்கள்.

இந்நிலையில், தன்பாலின உறவு பழக்கம் இல்லாதவர்களும் அப்படிப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்கத் துவங்கியிருக்கும் இக்காலத்தில் பிரபல இயக்குநரும், அரசியல் தலைவரும் புரிதல் இன்றி தன்பாலின உறவுயாளர்களை இழிவுபடுத்தியுள்ளனர் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

தன்பாலின உறவுயாளர்கள், திருநங்கையினர் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் ஜெயா, “தன்பாலின உறவு என்பதை ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்த கலாச்சாரம் என்று நினைப்பதால் பலரும் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். புராணக் கதைகளிலேயே ஓரினச்சேர்க்கை குறித்து இருக்கிறது.

கோப்புப்படம்

பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காமசூத்திரா புத்தகத்தில் தன்பாலின உறவு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, மொகஞ்சதாரோவிலும் எல்லோராவிலும் தன்பாலின உறவு பற்றிய ஓவியங்கள் உள்ளன. ஆகவே, பேண்ட், ஷர்ட், டி ஷர்ட், பீட்சா, பர்கர் போன்றவைதான் வெளிநாட்டுக் கலாச்சாரம்; தன்பாலின உறவு அல்ல.

சிலர் இன்னும் தன்பாலின உறவை இயற்கைக்கு மாறானது என நினைக்கிறார்கள். ஒரு வாதத்துக்காக அதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால், டெஸ்ட் ட்யூப் பேபி என்பது இயற்கைக்கு மாறானது இல்லையா?

உச்ச நீதிமன்றமே, தன்பாலின உறவு குற்றமல்ல என்று தீர்ப்பளித்திருக்கிறது. இதை விமர்சிப்பவர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள்!” என்கிறார் ஜெயா. ஆம்.. பெரும் போராட்டத்துக்குப் பிறகு, தன்பாலின உறவு குற்றமல்ல என்கிற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது.

தன்பாலின உறவு குற்றம் என 1860இல் வெள்ளையர் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இதே கருத்துடன், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377ஆவது பிரிவு இருந்தது. ஓரினச் சேர்க்கயில் ஈடுபட்டால் பத்தாண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

‘இது அநீதி. விருப்பத்துடன் தன்பாலின உறவு கொள்பவர்களைக் குற்றவாளியாகப் பார்க்கக் கூடாது’ என்ற குரல்கள் எழுந்தன. இது குறித்த வழக்கு ஒன்றில் 2009ஆம் ஆண்டு, டில்லி உயர் நீதிமன்றம், ‘பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பத்துடன் தன்பாலின உறவு கொள்வது குற்றமாகாது’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

கோப்புப்படம்

ஆனால் 2013ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பைத் தள்ளிவைத்தது. இச்சட்டத்தை திருத்துவதும், திரும்பப்பெறுவதும் இந்திய அரசின் பொறுப்பு, நீதித்துறையின் பொறுப்பல்ல என்று அறிவித்தது.

2016ஆம் ஆண்டு நாஸ் அறக்கட்டளை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இந்தியத் தலைமை நீதிபதி டி. எஸ். தாகூர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு எடுத்துக்கொண்டது. அந்த அமர்வு, இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியலைப்புக் குழுவிற்கு மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

அதில், ‘இந்திய தண்டனையியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 377ஆவது பிரிவில், தன்பாலின உறவு குற்றம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது, பகுத்தறிவில்லாதது, ஏற்க இயலாதது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தில் கால மாறுதலுக்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், நாட்டு மக்கள் அனைவரும் சமமாக வாழ்வதற்கான உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. 377ஆவது சட்டப் பிரிவில் இருக்கும் சில பகுதிகளைச் செல்லாது என்று அறிவிக்கிறோம்” என்றது உச்ச நீதிமன்றம். அதன்படி, மிருகங்கள், குழந்தைகளுடன் உறவு கொள்வது குற்றம். அதே நேரம் 18 வயதுக்கு வயதுக்கு மேற்பட்டவர் தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றமல்ல எனத் தீர்ப்பளித்தது.

தன்பாலின உறவு குற்றமல்ல என்று ஏற்கெனவே 124 நாடுகள் சட்டத் திருத்தம் செய்திருந்த நிலையில் 125ஆவது நாடாக இந்தியா இணைந்தது. தன்பாலின உறவு குறித்த இன்னொரு நம்பிக்கையும் நிலவியது – நிலவுகிறது. அது, தன்பாலின உறவு என்பது ஒருவகை மனநோய் என்பது. ஆனால் மனநல வல்லுநர்கள் – மருத்துவர்கள் இதை உறுதியாக மறுக்கிறார்கள்.

பிரபல மனநல மருத்துவர் மருத்துவர் அஜித் பிடே, “என்னிடம் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருப்பதாகவும், எனது ஆலோசனை வேண்டும் என்றும் வருவார்கள். அவர்களிடம், தன்பாலின உறவு என்பது நோயல்ல என்று அந்த பெற்றோருக்குத்தான் ஆலோசனை சொல்வேன்” என்கிறார்.

அந்தப் பெற்றோருக்கு மட்டுமல்ல, பிரபலங்கள் பலருக்கும்கூட அந்த ஆலோசனை தேவைப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.