முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந்தேதி டெல்லி செல்கிறார்

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ந்தேதி துபாய் புறப்பட்டு சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்று அபுதாபி சென்றார்.

இன்று மாலை அபுதாபியில் அவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அங்கிருந்து புறப்பட்டு நாளை அதிகாலை சென்னை வந்து சேருகிறார்.

இதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக 30-ந்தேதி (புதன்கிழமை) இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 31-ந்தேதி பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச உள்ளார்.

அப்போது நீட் மசோதாவுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாகவும், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளார்.

மேலும் டெல்லியில் ஏப்ரல் 2-ந்தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசுகிறார்.

மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.

மறுநாள் (ஏப்ரல் 1-ந்தேதி) காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல்காந்தி ஆகியோரை ஒரே இடத்தில் சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய தலைவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

2-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடக்கிறது அதில் கலந்து கொண்டு அண்ணா கலைஞர் அறிவாலயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதன் பிறகு அன்று இரவே சென்னை திரும்புகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.