’நமஸ்கார் மோடி ஜி…’ – பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக விஜயபிரபாகரன் இந்தி மொழியில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து தருமபுரியில் தேமுதிகவின் விஜயபிரபாகரன் இந்தி மொழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தருமபுரி நகரில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் இன்று தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன் பங்கேற்று, ‘கரோனா தொற்று சூழலால் பலரும் வேலை வாய்ப்பு, வருமானம் போன்றவற்றை இழந்து கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சாமானிய மக்களின் மீது பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களில் விலையை மேலும் மேலும் உயர்த்தி மத்திய அரசு கூடுதல் சுமையை ஏற்படுத்தி வருகிறது. இப்படி அவர்களை வதைத்தால் அவர்களால் எப்படி வாழ முடியும்? உக்ரைன் போர் காரணமாகத் தான் இந்தியாவில் எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள நிலைதான் தமிழகத்திலும், இந்தியாவிலும் ஏற்படும்.

‘தேமுதிக-வை மக்கள் ஆதரித்தால் வீடு தேடி வந்து ரேஷன் திட்டப் பொருட்களை வழங்குவோம்’ என்று தேமுதிக தலைவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு கூறியபோது பலரும் கிண்டல், கேலி செய்தனர். ஆனால், அவர் கூறிய அந்த திட்டம் இன்று எங்கோ ஒரு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதை இன்று பலரும் வரவேற்று பாராட்டுகின்றனர்.

மக்களுக்கு தனது சொந்தப் பணத்தில் பல உதவிகளை செய்து வருபவர் விஜயகாந்த். அவர் சினிமாவில் நடிப்பாரே தவிர, நிஜத்தில் அவருக்கு நடிக்கத் தெரியாது. மொழி, மதம், ஜாதி அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில் விஜயகாந்த் சிறந்தவர். தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் வரை பலவற்றையும் விமர்சனம் செய்து வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு மேற்கொள்ளும் எரிபொருள்களின் விலை உயர்வை கண்டிக்காதது ஏன்?” என்று பேசினார்.

பின்னர், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வு தொடர்பான கண்டன ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர் இந்தி மொழியில் பேசி முழக்கம் எழுப்ப, கட்சியினரும் அவரை பின்பற்றி முழக்கம் எழுப்பினர். இந்தி முழக்க ஆர்ப்பாட்டம், ‘நமஸ்கார் மோடி ஜி, ஆஜ் தம் யஹான் ஆப் தே சத்யோன் கேலியே…’ என தொடங்கி ‘தன்யவாத் மோடி ஜி’ என முடியும் வகையில் 10 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது.

முன்னதாக, மாண்டுவண்டியில் ஏற்றப்பட்ட ஸ்கூட்டரில் அமர்ந்து நகரின் முக்கிய சாலை வழியாக பயணித்து ஆர்ப்பாட்ட பகுதிக்கு விஜயபிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.