தி.மு.க., – அ.தி.மு.க, கொடி கம்பங்கள்

புதுச்சேரி : புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.சாரம், காமராஜர் சாலையில் இருந்து சக்தி நகர் செல்லும் சாலை சந்திப்பில் இருந்த தி.மு.க., – அ.தி.மு.க., கொடி கம்பங்களை, போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக, நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

அதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் மதியம் 1:15 மணி அளவில் காமராஜர் சாலை குறுக்கே கொடி கம்பத்தை போட்டு மறியலில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில், தி.மு.க.,வினரும் பேனர் மற்றும் தட்டுவண்டிகளை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.மறியலால், போக்குவரத்து பாதித்தது. வெகு நேரமாக போராட்டம் தொடர்ந்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

பொறுமை இழந்த அவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க, மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ‘போராடுவது உங்கள் உரிமை. அதற்காக எங்களை(மக்களை) துன்புறுத்துகிறீர்கள். பிரச்னைக்குரிய நகராட்சி அலுவலகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி வீட்டின் முன் போராட வேண்டியதுதானே’ என கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது.சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார்கள் குமரன், ராஜேஷ்கண்ணா, எஸ்.பி., பக்தவத்சலம், நகராட்சி பொறியாளர் நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அகற்றப்பட்ட கொடிக்கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று மறியல் கைவிடப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.