பஞ்சாப், அரியானாவின் கூட்டுத் தலைநகராக சண்டிகர் தொடரும்: அரியானா முதல் மந்திரி

சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அரியானா தனியாக பிரிக்கப்பட்ட போது, இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டிகர் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து யூனியன் பிரதேசமான சண்டிகரை பஞ்சாப் 60 சதவீதமும் ஹரியானா 40 சதவீதமும் நிர்வகித்து வந்தன. 

இந்த நிலையில், சண்டிகரில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும், மத்திய சேவை விதிகளின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த  பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், ‘மத்திய சேவை விதிகளால், சண்டிகர் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் ஆபத்து உள்ளது’ என குற்றம் சாட்டினார். 
இந்த நிலையில்,  சண்டிகரை முழுமையாக பஞ்சாபிற்கு மாற்ற வேண்டும் என்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பகவந்த் மான் முன்மொழிந்த தீர்மானம் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், பஞ்சாபில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், சண்டிகார் இரு மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக இருக்கும் என்றார். 
யூனியன் பிரதேச ஊழியர்களுக்கு மத்திய சேவை விதிகள் பொருந்தும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய அவர், பஞ்சாப் அரசு இந்த விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார்.
இரு மாநிலங்களுக்கும் சண்டிகர் தவிர வேறு பல பிரச்சனைகள் இருப்பதாக கூறிய அவர், இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு “மிகவும்” பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.