கேரளாவில் கோவில் விழாவில் நடனமாட 2 கலைஞர்கள் மறுப்பு

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம் கோவிலும் ஒன்று.

இக்கோவிலில் ஆண்டு தோறும் பாரம்பரிய கலைவிழா நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்து பிரபல இசை, நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

இந்த ஆண்டுக்கான விழா அடுத்த வாரம் தொடங்குகிறது. இதில் பிரபல நடன கலைஞர் மான்சியாவின் நடன நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது.

கோவில் நிர்வாகிகள் திடீரென மான்சியாவின் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தனர். அவர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக மான்சியா பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில் மாற்று மதத்தவர் என்பதால் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை குறிப்பிட்டு இருந்தார்.

மான்சியாவின் நடன நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் கூறும்போது, கலைக்கு சாதி, மதம் எதுவும் கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கூடல் மாணிக்கம் கோவில் விழாவுக்காக அழைக்கப்பட்டிருந்த 2 கலைஞர்கள் இப்போது நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர்.

பரதநாட்டிய கலைஞரான கார்த்திக் மணிகண்டன் என்பவர் வருகிற 17-ந் தேதி இக்கோவிலில் நடன நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக பேஸ்புக்கில் குறிப்பிட்டு உள்ளார்.

இதுபோல 21-ந்தேதி இசை நிகழ்ச்சி நடத்துவதாக இருந்த இசை கலைஞர் அஞ்சுவும் தனது நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளார். தற்போது இந்த பிரச்சினை கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.