சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- அதிமுக அறிவிப்பு

சென்னை: 
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 5ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக அரசு கொண்டு வந்த  திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக திமுக அரசு சீர்குலைத்து வருகிறது. தாலிக்குத் தங்கம், அம்மா மினி கிளினிக் போன்ற புரட்சிகரமான திட்டங்களை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் சொத்து வரி உயர்வு போன்ற கடுமையான நடவடிக்கைகளை, மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.
சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரை தமிழ் நாட்டில் சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்று தனது தேர்தல் அறிக்கையில் எண். 487-ஆவது வாக்குறுதியாக மக்களுக்கு உறுதி அளித்த திமுக, கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மக்கள் மீளமுடியாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது, வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகம். 
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு, சொத்து வரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசைக்  கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5.4.2022 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத்  தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். 
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.