சந்தேஷ்காலியில் சிபிஐ சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகார்

கொல்கத்தா: மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) ஆகியவற்றுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. தேர்தல் நாளில் (ஏப்.26) சிபிஐ சட்டவிரோதமாக சோதனை நடத்தி உள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரின் விவரம்: “2024 மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் (ஏப்.26) அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சந்தேஷ்காலியின் வெற்று இடங்களில் சிபிஐ சட்டவிரோதமாக சோதனை நடத்தியுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் உண்மையில் அந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்டதா அல்லது சிபிஐ, என்எஸ்ஜியால் ரகசியமாக புதைக்கப்பட்டதா என்று உறுதியாக அறிந்துகொள்ள வழியில்லை.

சட்டம் – ஒழுங்கு முழுவதும் மாநில அரசின் கையில் இருக்கிறது என்றாலும், இப்படி ஒரு சோதனை நடவடிக்கை குறித்து சிபிஐ எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. அதேபோல், மாநில போலீஸ் வசம் முழு அளவில் செயல்படும் வெடிகுண்டு செயலிழப்பு படை உள்ளது. இதுபோன்ற நடவடிக்கையின்போது வெடிகுண்டு செயலிழப்பு படையின் உதவி தேவைப்படும் என்று உணர்ந்திருந்தால், மாநில அரசு முழு அளவில் உதவி செய்திருக்கும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில் அமலாக்கத் துறை (ஈ.டி) அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக சிபிஐ வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது. இதில் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் அபு தாலேப் மொல்லா என்பவர் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக்கின் உறவினர் எனத் தெரியவந்திருப்பதாகவும், அவ்வளவு வெளிநாட்டு ஆயுதங்கள், வெடிபொருள்கள் ஏன் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது தெரியவில்லை என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இச்சோதனை குறித்து மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை கூறுகையில், “சந்தேஷ்காலியில் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆயுதங்களும் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்தவை. ஆர்டிஎஸ் போன்ற வெடிமருந்துகள் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

அந்தவகை ஆயுதங்கள் எல்லாம் சர்வதேச தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுபவை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள்விடுக்கிறேன். இந்த மாநிலம் ஒரு அமைதி பூங்கா. இந்தச் சம்பவங்களுக்கு மம்தா பானர்ஜியே முழு பொறுப்பு, அவர் கைது செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.