அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் எதிரொலி- இலங்கை அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா

கொழும்பு:
கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். 
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 
ஊரடங்கும் போடப்பட்டதால் கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் பொய்யானது என்றும், தற்போது அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. 
இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் கோத்தய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்சேவைத்  தவிர ஒட்டு மொத்தமாக  26 அமைச்சர்களும் பதவி விலகியுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்ததால், அதிபர்,  புதிய அமைச்சரவையை அமைக்க முடியும் என்று அவர் கூறினார். இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 
பதவி விலகியுள்ள அமைச்சர்களில் ராஜபக்சேவின் சகோதரர்கள்  நிதியமைச்சர் பசில், விவசாயத்துறை அமைச்சர் சமல் மற்றும் ராஜபக்சே மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நமல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.