இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் விரைவில் பள்ளத்தாக்கு திரும்பக்கூடும்- ஆர்எஸ்எஸ் தலைவர்

மூன்று நாள் ‘நவ்ரே’ கொண்டாட்டத்தின் கடைசி நாளில் காஷ்மீரி பண்டிதர்களிடம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், 1990ம் ஆண்டில் காஷ்மீர் பண்டிதர்கள் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியதன் பின்னணியில் உள்ள உண்மை குறித்து நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
காஷ்மீர் பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஒரு இந்துவாகவும், பாரத பக்தராகவும் பள்ளத்தாக்குக்கு திரும்புவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

நீங்கள் கடந்த காலத்தில் இடம்பெயர்ந்ததை குறித்து சிந்தித்திருக்கிறீர்கள். ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற எதுவும் உங்களுக்கு நடக்கக்கூடாது.

கடந்த காலத்தைப் போல நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் அண்டை வீட்டாருடன் அமைதியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், யாரும் உங்களை அங்கிருந்து மீண்டும் வெளியேற்ற முடியாது.

அத்தகைய தவறான நோக்கத்தைக் கொண்ட எவரும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இங்கு நல்லுறவை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களும் உள்ளனர். தீவிரவாதத்தை முறியடித்து அனைவருடனும் அமைதியாக வாழ வேண்டும்.

எங்கள் உறுதிமொழியை நிறைவேற்ற அதிக நாட்கள் ஆகாது. இது மிக விரைவில் நிறைவேறும். இந்த திசையில் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நமது வரலாறும், நமது தலைசிறந்த தலைவர்களும் நம் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளியாகவும், உத்வேகமாகவும் இருக்க வேண்டும்.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கியது மூலம், காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு பண்டிட்டுகள் திரும்புவதற்கான வழியைத் திறந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.