“ரஷ்யா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவுக்கு அறிவுரை கூற விரும்பவில்லை" – ஜெர்மனி தூதர்

உக்ரைனில் ரஷ்யப் படையினர் நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர் காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.` இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதில் ரஷ்யாவுக்கும் சிக்கல் உண்டானது. இதையடுத்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய ரஷ்யா முடிவெடுத்தது. பின்னர் அமெரிக்கா, ரஷ்யாவின் எரிபொருள்களை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. மேலும் தனது நட்புறவு நாடுகளையும் இந்த தடையைப் பின்பற்ற அமெரிக்கா வலியுறுத்தியது. இருப்பினும் இந்த விவகாரத்தில், ரஷ்யா இந்தியாவிடம் அதன் கச்சா எண்ணெய் சலுகையை முன்வைத்தது. அதனை இந்தியாவும் பரிசீலித்து வருவதாகக் கூறியது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் இந்தியாவை விமர்சித்தன.

செர்ஜி லாவ்ரோவ்-ஜெய்சங்கர்

இதற்கிடையில் 3 நாள்களுக்கு முன்னர் இந்தியா வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “இந்தியா விரும்புவதை நாங்கள் வழங்காத தயாராக உள்ளோம்” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், “ரஷ்யா எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவுக்கு அறிவுரை கூற விரும்பவில்லை” என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லிண்ட்னர்(Walter J Lindner) கூறியுள்ளார்.

இது தொடர்பாகத் தனியார் ஊடகத்திடம் பேசிய ஜெர்மனி தூதர், “ஐரோப்பாவில் பல நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் நிலக்கரியை நம்பியே உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. நாங்கள் ஏற்கெனவே இறக்குமதியைப் பெருமளவில் குறைத்து வருகிறோம். மேலும் எண்ணெய் சார்ந்து இருக்கும் எங்களின் இறக்குமதியை 0% குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லிண்ட்னர்

இந்தியா-ரஷ்யா எண்ணெய் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், “ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த சொந்த சார்புகள் உள்ளன. இங்கு பிரசங்கம் செய்ய ஒன்றுமில்லை. எங்களுக்குப் பொருளாதாரத் தடைகள் உள்ளன, அதைப் பயன்படுத்தி போரை நிறுத்த முடிந்தால், நாங்கள் அதைப் பயன்படுத்துவோம். மேலும், புதினை அணுகக்கூடிய எவரும் உக்ரைனில் நிகழும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ முடியும்” என்று வால்டர் ஜே லிண்ட்னர் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீதான விமர்சனங்களுக்கு, “ரஷ்யாவிலிருந்து அதிகமாக எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் ஐரோப்பிய நாடுகள்தான்” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.