கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக 'பிஎம்கேர்ஸ்' கீழ் பாலிடெக்னிக்குகளில் கூடுதல் இடம் ஒதுக்கீடு

சென்னை: கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் கல்வி பயில ஏதுவாக, பிஎம்கேர்ஸ் திட்டத்தின்கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளின் அனைத்து படிப்புகளிலும் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அகில இந்தியதொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ)கீழ் 3,500-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகள்உள்ளன. இதற்கிடையே தொழில்நுட்பக் கல்லூரிகள் 2022-23-ம்கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை ஏஐசிடிஇசமீபத்தில் வெளியிட்டது. அதில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

அந்தவகையில் கரோனா பரவலால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் கல்வி பயில்வதற்காக பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கரோனாபாதிப்பால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம்கேர்ஸ் திட்டத்தில் 2022-23-ம்கல்வியாண்டு முதல் அனைத்து பாலிடெக்னிக் பாடப்பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படும். இதனால் பிற மாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ உயரதிகாரிகள் கூறியதாவது: கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பிஎம்கேர்ஸ் திட்டத்தில் பலன்பெற முடியும். கடந்தமார்ச் மாத நிலவரப்படி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிஎம்கேர்ஸ் திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். அந்த குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர்கள் 10-ம் வகுப்பை முடித்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான வயதை அடையும் வரை இந்த ஒதுக்கீடு தொடரும். சேர்க்கையின்போது அந்த மாணவர்கள் பிஎம் கேர்ஸ்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். படிக்கும் காலங்களில் அவர்களுக்கு சிறப்பு உதவித்தொகையும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இதேபோல், பள்ளிப் பருவத்திலேயே ஆராய்ச்சியில் ஈடுபடும் அளவுக்கு சில குழந்தைகள் அதிகதிறனை இயல்பிலே பெற்றியிருப்பார்கள். அத்தகைய திறன்மிக்க குழந்தைகளுக்கு, கல்வி திட்டப் பணிகளில் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் 2 சூப்பர்நியூமரரி இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏஐசிடிஇயின் இந்த அறிவிப்பை பலர் வரவேற்றுள்ளனர் அதேநேரம், இத்திட்டத்தில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான கல்விகட்டணத்தையும் மத்திய அரசு ஏற்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர் கல்வி நிறுவனங்களிலும் ஒதுக்கீடு

யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில் ‘‘மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களும் (பொறியியல், கலை, அறிவியல் உட்பட) ‘பிஎம்கேர்ஸ்’ திட்டத்தின் கீழ் கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்து, அதற்கு தகுதியான குழந்தைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஒதுக்கீடு, பாதிக்கப்பட்ட குழந்தைகள் கல்லூரிகளில் சேருவதற்கான வயதை அடையும் வரை தொடரும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.