காஷ்மீர் முதல் குமரி வரை, கட்ச் முதல் கோஹிமா வரை அனைத்து மக்களுக்காகவும் பாஜக தொடர்ந்து பாடுபடும் : பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி:பாஜக 1980ம் ஆண்டு இதேநாளில் (ஏப். 6) தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் 42ம் ஆண்டு நிறுவன நாள் தினத்தை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் இன்று தொடங்கி வரும் 20ம் தேதி வரை சமூக நீதிக்கான நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி பாஜக தலைமையத்தில் நடந்த நிறுவன தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் இந்திய நாட்டின் கனவுகளின் பிரதிநிதிகள். மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு கட்சியின் எம்பிக்களின் எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது.  நாட்டுக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். உலகம் முழுவதும் பரவியுள்ள பாஜகவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கோஹிமா வரை அனைத்து மக்களுக்காகவும் பாஜக தொடர்ந்து பாடுபடும். உலகளாவிய கண்ணோட்டத்தில் அல்லது தேசியக் கண்ணோட்டத்தில், ஒவ்வொரு பாஜக தொண்டரின் பொறுப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எவ்வித அச்சமோ அழுத்தமோ இல்லாமல், தனது சொந்த நலன்களுக்காக உறுதியுடன் இந்தியா நிற்கிறது. உலகம் முழுவதையும் இரண்டு எதிரெதிர் துருவங்களாகப் பிரித்து பார்த்தால், ​​இந்தியா ஒரு துருவமாகப் பார்க்கப்படுகிறது. மன உறுதியுடன் மனிதநேயம் பேசக்கூடிய நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய அரசான தேசிய நலனை முதன்மைப்படுத்தி செயல்பட்டு வருகிறது. நாட்டிற்கான கொள்கைகள், நோக்கங்கள், முடிவெடுக்கும் சக்தி போன்றவற்றை கட்டமைத்து வருகிறோம். அதனை நிறைவேற்றி வருகிறோம்’ என்றார். இவ்விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.