போதைப்பொருள் பாவனையினை தனி மனித முயற்சியினால் கட்டுப்படுத்த முடியாது – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது இதனை தனி மனித முயற்சியினால் கட்டுப்படுத்த முடியாது அனைவரும் இணைந்தே கட்டுப்படுத்த முடியும் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் மற்றும் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் மற்றும் இளையோர்களை பாதுகாப்பதில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன்; தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.

எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக போதைப்பொருள் பாவனை காணப்படுவதோடு, பல சவால்களுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தடுப்பு முயற்சிகளில் ஈடுபடவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து பாதுகாத்தல், கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளுதல், அவர்களுக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல், குடும்பம் மற்றும் சமூகத்தோடு அவர்களை இணைத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

மேலும் இக் கலந்துரையாடலில் செயற்பாட்டு முன்னேற்ற ஆண்டறிக்கை, தற்போதைய செயற்பாடுகள், தடுப்பு முயற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், அருட்தந்தை வின்சன் பற்றிக், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.