#லைவ் அப்டேட்ஸ்: ரஷிய அதிபர் புதின் மகள்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகள்

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 42-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:- 
ஏப்ரல் 07,  02.06 a.m
உக்ரைன் நேட்டோ, ஜி7 உடன் அதிக ஆயுதங்களை வாங்குவது பற்றி விவாதிக்க உள்ளது

நேட்டோவின் வெளியுறவு அமைச்சர்களின் ஜி7 கூட்டத்தில் அதிக தற்காப்பு ஆயுதங்களை வாங்குவது குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். “பிரஸ்ஸல்ஸில் எனது விவாதத்தின் முக்கிய தலைப்பு உக்ரைனுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் வழங்குவதாகும்” என்று குலேபா ஒரு வீடியோ உரையில் கூறினார்.
ஏப்ரல் 07,  01.46 a.m
இஸ்யூமில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க முடியாமல் மீட்புக் குழுக்கள் தவிப்பு
டான்பாஸ் பகுதிக்கு செல்லும் முக்கிய பாதையான ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு நகரமான இஸ்யூமில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற முடியவில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். குழுக்களால் அங்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப முடியவில்லை என்று கார்கிவின் பிராந்திய கவர்னர் ஓலே சினெகுபோவ் ஒரு சமூக ஊடக பதிவில் தெரிவித்தார். இஸ்யூம் நகரைச் சேர்ந்த 93 பொதுமக்கள் ரஷியப் படைகளால் கொல்லப்பட்டதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் லெசியா வாசிலென்கோ கூறினார்.
ஏப்ரல் 07,  12.52 a.m
ரஷியா அதிபர் புதின் தனது லட்சியத்தை மாற்றியதற்கான அறிகுறி இல்லை’: நேட்டோ தலைவர்
ரஷியா அதிபர் புதின் தனது லட்சியத்தை மாற்றியதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் காணவில்லை என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நேற்று வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டத்தில் தெரிவித்தார். உக்ரைனில் நடந்த கொடூரமான போரைப் பற்றி உரையாற்றிய அவர், “ரஷியாவின் அதிபர் புதின், உக்ரைன் முழுவதையும் கட்டுப்படுத்தவும், சர்வதேச ஒழுங்கை மீண்டும் மீறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார். 
ஏப்ரல் 07,  12.16 a.m
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மகள்கள் மரியா புதினா, கேட்டரினா டிக்கோனோவா.
இவர்களை குறிவைத்து புதிய தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதன்படி அவர்கள் அமெரிக்க நிதி அமைப்பில் எந்த பரிமாற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.
புதினின் மகள்களுடன், ரஷிய பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவின் மனைவி, குழந்தைகள், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களும் அமெரிக்காவின் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு அமெரிக்காவில் ஏதேனும் சொத்துகள் இருந்தால், அவற்றை பயன்படுத்தமுடியாமல் முடக்கப்படும்.
அதேபோல ரஷியாவின் ஸ்பெர் வங்கி, ஆல்பா வங்கி ஆகியவை அமெரிக்க நிதி அமைப்பை தொடர்புகொள்ள முடியாது. இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் ரஷியாவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.