‛தமிழ் தான் இணைப்பு மொழி' : அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

சென்னை : மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்த ஹிந்தி தொடர்பான கருத்துக்கு பதில் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛‛தமிழ் தான் இணைப்பு மொழி'' என கூறி உள்ளார்.

தமிழகத்தில் அவ்வப்போது ஹிந்தி தொடர்பான சர்ச்சைகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் அமித் ஷா, ‛‛ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும்'' என கூறினார். இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பலரும் கருத்து பதிவிட்டனர். ஒரு மொழியை கற்க நினைப்பது அவரவர் இஷ்டம். இதை ஏன் தடுக்க வேண்டும் என பலரும் கருத்து பதிவிட்டனர். அதேசமயம் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. ஒரு மொழியை கற்பது தவறல்ல, அதை திணிப்பதை தான் ஏற்க மாட்டோம் என பலரும் எதிர் கருத்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற திரைப்பிரபலங்கள் ஹிந்திக்கு எதிராக தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்றுமுன்தினம், ‛‛இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்'' என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு, தமிழ்தாய் தமிழின் அடையாளமான ‛ழ' கரத்துடன் இருப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டு, தமிழணங்கு என பதிவிட்டார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. பலரும் இதை டிரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் நடக்கும் சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசிய ரஹ்மான், ‛‛தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமைப்பட வேண்டும். ஒரே இந்தியா தான். வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை'' என்றார். நிகழ்ச்சியை முடித்து திரும்பிய ரஹ்மானிடம் ‛‛இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியது பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு ‛தமிழ்தான் இணைப்பு மொழி' என்றார் ரஹ்மான். இவரின் இந்த கருத்து வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.