ஆளுநர் தேநீர் விருந்து: பங்கேற்கும் கட்சிகள் எவை?

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்துவருவதால், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ளும் கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகி உள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வழி செய்யும் வகையில் தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட நாள் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, தமிழக அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழக சட்டப் பேரவையில் பிப்ரவரி 8-ம் தேதி மீண்டும் நீட் விலக்கு மசோதா ஒரு மனதாக நிறைவெற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக திமுக அரசு விமர்சித்து வருகிறது.

இதனிடையே, கடந்த மார்ச் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆளுநரும் உறுதியளித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக அளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று மாலை (ஏப்ரல் 14) தேநீர் விருந்து அளிப்பதாக அழைப்பு விடுத்தார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்யும் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பதாக முதலில் அறிவித்தது. இதையடுத்து, திமுக கூட்டணி கட்சியான விசிக, இன்று மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருதில் கலந்துகொள்ளாமல் உறக்கணிப்பதாக அறிவித்தது.

தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில், செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது, தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது; தமிழர் விரோதப்போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பை புறக்கணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இந்த நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக தெரிவித்தார். இதன் மூலம், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, மனிதநேய மக்கள் கட்சி மட்டுமல்லாமல் பாஜகவுடன் இணக்கமாக இருக்கும் பாமகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தில், எந்தெந்த கட்சிகள் கலந்துகொள்ளும் என்ற விவரங்கள் எழுந்துள்ளன. ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதே போல, இந்த தேநீர் விருந்தில், பாஜக எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.