இங்கிலாந்து பிரதமர் நாளை இந்தியா வருகை: குஜராத்தில் இருந்து தொடங்கும் பயணம்!

இங்கிலாந்து
பிரதமர்
போரிஸ் ஜான்சன்
இரண்டு நாள் பயணமாக வருகிற 21ஆம் தேதி (நாளை)
இந்தியா
வரவுள்ளார். பிரதமராக அவர் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அவர் இந்தியா வரவுள்ளார். இதற்கு முன்பு குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனவரி மாதம் இந்தியாவுக்கு அவர் வரவிருந்தார். ஆனால், கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாளை இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பயணத்தை குஜராத்தில் இருந்து தொடங்கவுள்ளார். அவர் குஜராத் மாநிலம் செல்வது இதுதான் முதல்முறை என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இந்தப் பயணம் தொடங்கும். முன்னணி வர்த்தக நிறுவனங்களைச் சந்தித்து, இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் வணிக, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகள் குறித்து இந்த பயணத்தின் போது விவாதிக்கப்படும்.” என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் குஜராத்தில் இருந்து டெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன், வருகிற 22ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 54ஆவது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதற்கிடையே,போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளார். இந்த போர் தொடர்பாக இங்கிலாந்து – இந்தியா ஆகிய இரு நாடுகளும் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளன. ரஷ்யா மீது இங்கிலாந்து ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஆனால், மத்திய பாஜக அரசு இந்த விவகாரத்தில் இராஜதந்திர நேர்த்தியான நடுநிலைமையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மோடி அரசு வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பில் ஆதரவளிக்கவும் இந்தியா மறுத்து விட்டது.

இந்த சூழலில் இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் – ரஷ்யா விவகாரம் குறித்தும் இந்தியாவுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுவதால், அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.