கே.சி.ஜெனரல் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட புதிய தாய், சேய் பிரிவு| Dinamalar

மல்லேஸ்வரம்:”கே.சி.ஜெனரல் அரசு மருத்துவமனை வளாகத்தில், 100 படுக்கைகள் கொண்ட புதிய தாய், சேய் மருத்துவமனை அமைக்கப்படும்,” என சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி.ஜெனரல் அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனங்கள் உதவியுடன் பத்து ஐ.சி.யூ., படுக்கைகள் அமைக்கப்பட்டது. இது போன்று புதிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டன.இதை சுகாதார துறை அமைச்சர் சுதாகர், நேற்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:கே.சி.ஜெனரல் அரசு மருத்துவமனை வளாகத்தில், 100 படுக்கைகள் கொண்ட புதிய தாய், சேய் மருத்துவமனை அமைக்கப்படும். வாணி விலாஸ் மருத்துவமனை போன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவித்தப்படி, பெங்களூரு நகரின் நான்கு திசைகளிலும் தலா 500 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அமைக்கப்படும். இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட ஒன்றரை லட்சம் குழந்தைகள் ‘நிமோனியா’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஆயிரத்தில் 28 இறப்புகள், நிமோனியாவில் ஏற்படுகின்றன.இந்த இறப்பை கட்டுப்படுத்தும் வகையில், மாநில முழுதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். இதற்காக ஆஷா சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கர்ப்ப பையில் உள்ள சிசு, ஆணா, பெண்ணா என்பதை சொல்வதை தடுக்க கடுமையான விதிமுறைகள் உள்ளன. யாரும் சிசுவின் விவரத்தை பெற்றோரிடம் சொல்ல கூடாது. கே.சி.ஜெனரல் மருத்துவமனை, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறந்த அரசு மருத்துவமனை. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, குடும்பத்தினர் போன்று கவனிப்பது அவசியம். ஆனால், எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யும் வகையில் செயல்பாடு இல்லை.
ஜெயதேவா, வாணி விலாஸ் போன்ற அரசு மருத்துவமனைகளில், தனியாரை விட தரமான சிகிச்சை கிடைக்கிறது. அந்த சிகிச்சை கே.சி.ஜெனரல் மருத்துவமனையில் கிடைக்காதது ஏன் என்று யோசிக்க வேண்டும்.நல்ல சிகிச்சை வழங்கி சிறப்பாக பணியாற்ற வேண்டும். மக்களுக்கும் நல்லது நடக்கும். அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.