தமிழக மக்களிடம் கருத்துக்கேட்க ஆங்கிலத்தில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு.! 

“வீடுகளற்று வீதியிலிருக்கும் மனநல பிணியாளர்கள்” குறித்த தமிழ்நாடு அரசின் வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில், “வீடுகளற்று வீதியிலிருக்கும் மனநல பிணியாளர்கள்” குறித்து அக்கறையோடு தனது முதல் வரைவு கொள்கை அறிக்கையை தமிழ்நாடு அரசு 19.04.2022 அன்று  (https://nhm.tn.gov.in/en/node/6236) என்ற இணையதளத்தில் வெளியிட்டு அதுகுறித்து பொதுமக்களின் கருத்துக்கள் கோரியுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால், தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 144 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையானது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. மேலும் வரைவு அறிக்கை வெளியிடப்பட்ட 7 தினங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டு உள்ளது. பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களை பெற்று கொள்கை அறிக்கை உருவாக்க வேண்டுமென்ற தமிழக அரசின் நோக்கமே கேள்விக்குள்ளாக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய நல குழுமத்தின்  (National Health Mission – Tamil Nadu)     தமிழக பிரிவு செயல்படுகிறது.  இத்தகைய அணுகுமுறையும், நடைமுறையும் ஏற்கத்தக்கதல்ல.

“வீடுகளற்று வீதியிலிருக்கும் மனநல பிணியாளர்கள்” குறித்து பலதுறை சார்ந்தவர்கள் குறிப்பாக, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வீட்டுவசதித்துறை, கல்வித்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மற்றும் அரசியல் இயக்கங்கள், அமைப்புகள் ஆகியோரின் கருத்துக்களை பெற்று வரைவு அறிக்கையானது இறுதி செய்யப்பட வேண்டும்.

  எனவே, “வீடுகளற்று வீதியிலிருக்கும் மனநல பிணியாளர்கள்”  குறித்த வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். அவ்வாறு தமிழில் வெளியிடப்படும் வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை தெரிவிப்பதற்கு போதிய கால அவகாசத்தை வழங்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.