பார்வையற்ற சகோதரர்களால் வடிவமைக்கப்பட்ட 29 அடி உயர தேர்

பெங்களூரு:

சாதனை செய்வதற்கு வயதோ, உடல் ஊனமோ ஒரு தடை இல்லை என்று கூறுவார்கள். தற்போது பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களது திறனை வெளிப்படுத்தி சாதனைகளை புரிந்து வருகிறார்கள். இதுபோல கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையை சேர்ந்த பார்வையற்ற சகோதரர்கள் தேரை வடிவமைத்து சாதனை படைத்து உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா பேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா. தேர்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவரான இவர் பல கோவில்களுக்கு தேர்களை வடிவமைத்து கொடுத்து உள்ளார். இதற்காக அவர் கர்நாடக அரசின் விருதையும் பெற்று இருந்தார். இந்த நிலையில் கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா பட்டாலசிந்தி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் ஊரில் உள்ள மாருதேஸ்வரா கோவிலுக்கு தேர் வடிவமைத்து தர வேண்டும் என்று மல்லப்பாவிடம் கேட்டு இருந்தனர். அவரும் இதற்கு ஒப்புகொண்டார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு தேர் வடிவமைக்கும் பணிகள் நடந்து வந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக மல்லப்பா இறந்தார்.

இதனால் தேரை வடிவமைக்கும் வேலைகள் நின்று போனது. இந்த நிலையில் மல்லப்பாவின் மகன்களான சுரேஷ், மகேஷ் ஆகியோர் தேரை வடிவமைத்து தருவதாக பட்டாலசிந்தி கிராம மக்களிடம் கூறினர். அவர்களை கூறியதை கேட்ட கிராம மக்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர். ஏன் என்றால் சகோதரர்கள் 2 பேரும் பார்வையற்றவர்கள். பார்வையற்றவர்களால் தேரை வடிவமைக்க முடியுமா? என்று கேள்வியும் எழுந்தது. ஆனால் சகோதரர்கள் தங்களது தந்தை தேரை வடிவமைப்பது பற்றி கற்றுக்கொடுத்த கலை எங்கள் மனதில் உள்ளது. எங்கள் தாயின் உதவியுடன் தேரை வடிவமைத்து தருகிறோம் என்று கூறினர். இதற்கு கிராம மக்களும் சம்மதித்து இருந்தனர்.

பின்னர் பார்வையற்ற சகோதரர்கள், அவர்களது தாயின் ஆலோசனையின் பேரில் இன்னொரு சிற்பி உதவியுடன் மாருதேஸ்வரா கோவிலுக்கு 29 அடி உயர தேர் வடிவமைத்தனர். அந்த தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 15-ந் தேதி கிராமத்தில் நடந்த மாருதேஸ்வரா கோவில் திருவிழாவின் போது புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரில் தான் சாமி பவனி நடந்தது. அந்த தேரை தந்தை பாணியில் அப்படியே சகோதரர்கள் வடிவமைத்து இருப்பதாக கிராம மக்கள் பாராட்டி உள்ளனர்.

இதையும் படிக்கலாம்…
அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை: 100 சவரன் நகை கொள்ளை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.