RCB v RR: மீட்பராக மாறிய ரியான் பராக்; மீண்டும் சொதப்பிய கோலி; முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்!

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை அடைந்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 145 ரன்களைக் கூட சேஸ் செய்ய முடியாமல் 115 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருக்கிறது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் கதையாக இந்தப் போட்டியிலும் விராட் கோலி செம சொதப்பலான ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார். மொத்தத்தில் டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஆர்சிபி திடீரென செல்ஃப் எடுக்காத வண்டியாக கரைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

பெங்களூரு அணியின் கேப்டனான டு ப்ளெஸ்ஸிதான் டாஸை வென்றிருந்தார். கோலி ஓப்பனிங் இறங்கப்போகிறார் எனும் நற்செய்தியுடன் சேஸிங்கை தேர்வு செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இந்த டாஸில் தொடங்கி அடுத்த ஒன்றரை மணி நேரமும் பெங்களூருவிற்கு சாதகமாகத்தான் எல்லாமே அரங்கேறியது.

சீரான இடைவெளியில் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகளை பெங்களூருவின் பௌலர்கள் அடுத்தடுத்து வீழ்த்திக் கொண்டே இருந்தனர். குறிப்பாக, பவர்ப்ளேயில் வீசிய சிராஜும் ஹேசல்வுட்டும் மிரட்டலான சம்பவங்களைச் செய்திருந்தனர். படிக்கலுக்கு ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் வகையில் ஒய்டு லெந்த்தில் வீசி செட் செய்துவிட்டு, ஒரு ஃபுல் லெந்த் டெலிவரியை உள்பக்கமாக திருப்பி படிக்கல்லை சிராஜ் lbw ஆக்கினார்.

Hazelwood

அடுத்ததாக இந்த சீசனின் மோஸ்ட் வாண்டட் விக்கெட் ஜோஸ் பட்லர், அவரை ஹேசல்வுட் வீழ்த்தினார். சகட்டுமேனிக்கு ஸ்கோர் செய்து ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் பட்லரை எந்தவித சேதாரமும் ஏற்படுத்தும் முன்பே ஹேசல்வுட் வீழ்த்தி அசத்தினார்.

9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டிருந்த பட்லர் 8 ரன்களில் அவுட் ஆனார். ஆஃப் சைடை முழுமையாக கவர் செய்து ஒரு ஸ்லிப் + ஷார்ட் தேர்டுமேன் வைத்து டீப் ஸ்கொயரிலும் ஃபீல்டை வைத்து ஹேசல்வுட் வீசிய ட்ரேட் மார்க் குட் லெந்த் டெலிவரியில் மிட் ஆன் க்ளியர் செய்ய நினைத்து அரைகுறையாக ஒரு ஷாட்டை அடித்து சிராஜிடம் கேட்ச் ஆகியிருந்தார். இந்த சீசனில் முதல் முறையாக பட்லர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகியிருக்கிறார். இதற்காகவே ஆர்சிபிக்கு தனியாக பாராட்டு விழா நடத்தலாம். இடையில் சில பவுண்டரிகளை அடித்து கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த அஷ்வினை சிராஜே பந்துவீசி ஒரு ஷார்ட் பாலில் அவரே கேட்ச் பிடித்துக் கொண்டார். ராஜஸ்தானின் டாப் ஆர்டரை வெகு சீக்கிரமே காலியாக்கி பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ராஜஸ்தானின் கேப்டன் சஞ்சு சாம்சன் கொஞ்சம் இடையூறு செய்தார். குறிப்பாக, ஸ்பின்னர்களுக்கு எதிராக பொளேர் பொளேரென பெரிய பெரிய சிக்ஸர்களை அடித்தார்.

ஆனால், அவரும் வனிந்து ஹசரங்காவின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று ஸ்டம்பை பறிகொடுத்து 27 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு, 18வது ஓவர் வரைக்குமே ராஜஸ்தான் அணி மந்தமாகவே ஸ்கோர் செய்தது. தொடர்ச்சியாக 44 பந்துகளுக்கு பவுண்டரியே வராமலும் இருந்தது. விக்கெட்டுகள் வேகமாக விழுந்த போதும் ரியான் பராக் ஒரு முனையில் நிதானமாக நின்று ஆடியிருந்தார். கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டார்.

Riyan Parag

ஹர்ஷல் படேல் வீசிய 20வது ஓவரில் மட்டும் 18 ரன்களை அடித்திருந்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சிறப்பாக முடித்துக்கொடுத்தார். 31 பந்துகளில் 56 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகவும் இருந்தார்.

120க்குள் அடங்கியிருக்க வேண்டிய ராஜஸ்தான் அணி, ரியான் பராக்கின் கடைசிக்கட்ட அதிரடியால் 144 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணிக்கு 145 ரன்கள் மட்டுமே டார்கெட். சுமாரான டார்கெட்தான் இது. ஆனால், பெங்களூரு அணியால் இந்த டார்கெட்டை கூட எட்ட முடியவில்லை. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்து 68 ரன்களுக்கு பெங்களூரு அணி ஆல் அவுட் ஆகியிருந்தது. அந்த போட்டியின் ஹேங் ஓவரோடே இந்தப் போட்டியிலும் ஆடியதை போல் இருந்தது.

குறிப்பாக, விராட் கோலி இந்தப் போட்டியிலும் தனது சொதப்பலை தொடர்ந்தார். கோலி ஓப்பனராக ப்ரோமோட் ஆனது ஒரு வரவேற்கதக்க மாற்றமாக பார்க்கப்பட்டது. ஏனெனில், கோலியின் ஆவரேஜ் அவர் ஓப்பனிங் இறங்கும்போதுதான் மிக அதிகமாக இருக்கிறது.

Virat Kohli

கடந்த சீசன்களில் ஓப்பனிங் இறங்கிய சமயங்களில்தான் அவரின் பீஸ்ட் மோடு வெளிப்பட்டிருக்கிறது. 2016 சீசனில் ஓப்பனிங் இறங்கி மட்டும் 973 ரன்களை அடித்திருந்தார்.

இப்போது மீண்டும் அந்த ஓப்பனிங் ஸ்பாட்டிற்கு கோலி திரும்பியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்தது. ஆனால், அவர் ஆடிய விதம், அதில் எந்த மாற்றமுமே இல்லை. வெறும் ஏமாற்றம்தான் இருந்தது. 10 பந்துகளில் 9 ரன்களை எடுத்திருந்தார். ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கோலிதான் ஸ்ட்ரைக் எடுத்திருந்தார். அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும்போதும் துணிச்சலோடு ஸ்ட்ரைக்கை எடுத்த விதமே பாசிட்டிவ்வாக பார்க்கப்பட்டது.

போல்ட் ஓவர் தி விக்கெட்டில் வந்து வீசிய முதல் இரண்டு பந்துகளையும் மிடில் ஆஃப் தி பேட்டில் நன்றாக டிஃபண்ட் ஆடினார். மூன்றாவது பந்து. அதிலிருந்துதான் பிரச்னையே தொடங்கியது. மிட் விக்கெட்டை ஷார்ட்டாக வைத்து ஷார்ட் லெக் போன்ற ஒரு ஃபீல்டை வைத்து ட்ரென்ட் போல்ட் அட்டாக் செய்தார். அந்த மூன்றாவது பந்தைத் தட்டிவிடுகிறேன் என அந்த ஷார்ட் லெக்கிற்கு கொஞ்சம் பின்னதாக நின்ற டேரில் மிட்செலுக்கு கோலி கேட்ச்சாகக் கொடுத்தார். ஆனால், அது ஜஸ்ட் மிஸ்ஸில் ஒன் பிட்ச் ஆகியிருந்தது. இல்லையேல், ஹாட்ரிக் டக் அவுட் எனும் புதிய சாதனை கோலியின் பெயரை அலங்கரித்திருக்கும். அடுத்த நான்காவது பந்து ஒரு யார்க்கருக்கான முயற்சி. அதை சரியாக லெக் சைடில் திருப்பிவிட்டு பவுண்டரி ஆக்கியிருந்தார். அடுத்த பந்தில் இன்சைட் எட்ஜ்ஜாகி ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி. எப்படியோ இந்த ஓவரைக் கடந்துவிட்ட கோலியே அடுத்த ஓவரிலும் ஸ்ட்ரைக்கில் இருந்தார். இந்த ஓவரில் கோலிக்கு ஷார்ட் பிட்ச் டெலிவரிகளாக வீசி பிரஷித் கிருஷ்ணா காரியத்தைச் சாதித்தார். நல்ல ஒயிடாக ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியை வீசிவிட்டு, அடுத்ததாக கொஞ்சம் டைட்டாக ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியை வீச அதை புல் அடிக்க முயன்று எட்ஜ் ஆகி பாயிண்ட்டில் நின்ற ரியான் பராக்கிடம் கோலி கேட்ச் ஆனார். மீண்டும் ஒரு முரட்டுத்தனமான சொதப்பல். முன்பெல்லாம் இப்படி கோலி நினைத்தப்படிக்கு ஒரு ஷாட் கனெக்ட் ஆகவில்லையெனில் அவர் மீதே அவர் கோபப்பட்டுக் கொள்வார். அவருக்கு அவரே ஒரு குத்துவிட்டுக் கொள்வார். ஆனால், இங்கே விரக்தியில் ஒரு வெறுமை நிறைந்த புன்னகையோடு கோலி பெவியனுக்கு நடையைக்கட்டினார்.

Virat Kohli

ரவிசாஸ்திரி சொன்னதை போல கோலிக்கு சில மாதங்கள் ஓய்வுதான் தேவைப்படுகிறது போல!

முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் பெங்களூரு அணி 37-1 என்ற ஸ்கோரை மட்டுமே எட்டியிருந்தது. பவர்ப்ளேயில் மிகக்குறைவான ஆவரேஜை வைத்திருக்கும் அணி பெங்களூரு என்பது இந்தப் போட்டியிலும் நிரூபணமானது. 7வது ஓவரை குல்தீப் சென் வீசினார். குல்தீப் சென் இந்த சீசனில்தான் அறிமுகமானார். முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் சிறப்பாக வீசினார். அதன்பிறகு, பென்ச்சில் வைக்கப்பட்டவர் இப்போது இந்தப் போட்டியில் மீண்டும் அணிக்குள் வந்திருந்தார். இவர் வீசிய அந்த 7வது ஓவர்தான் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Kuldeep Sen

டு ப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் என இரண்டு பெரிய விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தினார். ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் டு ப்ளெஸ்ஸியை எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் ஆக்கியவர், அதேமாதிரியான இன்னொரு டெலிவரியில் மேக்ஸ்வெல்லை எட்ஜ் ஆக்கி ஸ்லிப்பில் கேட்ச் ஆக்கியிருந்தார். இந்த வீழ்ச்சியிலிருந்து பெங்களூரு அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை. அஷ்வின் தனது அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூருவை மொத்தமாகச் சுருட்டினார்.

தினேஷ் கார்த்திக்கும் ராஜஸ்தான் பௌலர்களுக்கு வேலை கொடுக்காமல் அவரே ரன் அவுட் ஆகி ஏமாற்றினார்.

Dinesh Karthik

ஆபத்பாந்தவனான ஷபாஷ் அஹமதுவாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 19.3 ஓவர்களில் பெங்களூரு அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ராஜஸ்தான் அணி சார்பில் அரைசதம் அடித்திருந்த ரியான் பராக் 4 கேட்ச்களையும் பிடித்து அசத்தியிருந்தார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியிருந்தார். ராஜஸ்தான் 10-15 ரன்களைக் குறைவாக எடுத்துமே பெங்களூரு அணியால் வெல்ல முடியவில்லை. இந்த சீசனில் ஒரு அணி டிஃபண்ட் செய்திருக்கும் மிகக்குறைவான ஸ்கோர் இதுவே.

19வது ஓவரில் ரியான் பராக்கிற்கு வனிந்து ஹசரங்கா விட்ட அந்த ஒரு கேட்ச் ட்ராப்தான் பிரச்னை. ஏனெனில், அதன்பிறகு, அவர் 24 ரன்களைச் சேர்த்தார். பெங்களூரோ 29 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றிருக்கிறது. ஆக, அந்த கேட்ச் ட்ராப் நிகழாமல் இருந்திருந்தால் ஒருவேளை பெங்களூரு வென்றிருக்கலாம். இப்படியெல்லாம் பெங்களூருவின் தோல்விக்கு காரணம் கூறலாம். ஆனால், 144 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாத இயலாமையை இந்தக் காரணத்தை கொண்டெல்லாம் நியாப்படுத்தி விட முடியாது. கடந்த சில சீசன்களாகவே மிகச்சிறப்பாக தொடங்கி பிற்பாதியில் சொதப்பி, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டு, எலிமினேட்டரில் ஆடி அத்தோடு வெளியேறிவிடுவதை பெங்களூரு வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்த சீசனிலும் அதே வழக்கம் தொடர்வது போல் தெரிகிறது.

முதல் முறையாக கோப்பையை வெல்ல துடிக்கும் அணிக்கு இது எந்தவிதத்திலும் நல்லதல்ல!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.