தஞ்சை தேர்த் திருவிழா விபத்து: `நீ வந்தாதான் வீட்டுக்குப் போவேன், வாப்பா!' – உருக்கும் மகளின் கதறல்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மின்சாரம் பாய்ந்து மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் தன் 12 வயது மகனைப் பறிகொடுத்தார் ஒரு தாய். ஒரு வருடத்திற்கு முன் கணவரை இழந்த இந்தப் பெண், இப்போது மகனையும் இழந்து தவிக்கிறார். ”என் ரெண்டு கண்ணையும் இழந்து தனி மரமாகிட்டேனே…” என அவர் கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் தேர் விபத்து ஏற்படுத்திய பாதிப்பு

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் நேற்று இரவு மூன்று மணியளவில் மின் விபத்து ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன்,தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி, எஸ்.பி ரவளி பிரியா உள்ளிட்டோர் சம்பவ இடம் மற்றும் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறித் துடித்த காட்சி கண்கலங்க வைத்தது. விபத்து நடந்த களிமேடு கிராமத்திற்கு தஞ்சையில் பல பகுதியிலிருந்தும் மக்கள் சென்றனர்.

மின் விபத்து ஏற்பட்டு தீப் பிடித்து எரிந்ததில் தேர் முற்றிலுமாக எரிந்து விட்டது. ”பத்து நிமிஷத்துல தேர் திருநாவுக்கரசர் அப்பர் மண்டபத்தை அடைஞ்சிருக்கும்… இந்த விபத்தும் நடந்திருக்காது” என சம்பவ இடத்திலிருந்து பலரும் சோகத்தைப் பகிர்ந்தனர்.

உயிரிழந்த 11 பேரின் உடல்கள் மார்ச்சுவரியில் வைக்கப் பட்டுள்ளன. அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறிக் கொண்டிருந்தனர். ரேணுகா என்ற பெண்ணின் கணவர் ராஜா, ஒரு வருடத்துக்கு முன் உடல் நலமின்றி இறந்து விட்டார். இப்போது இந்த விபத்தில் அந்தப் பெண்ணின் 12 வயது மகன் சந்தோஷும் இறந்திருக்கிறான். “கணவர் இறந்த துயரத்துலேருந்தே என்னால இன்னும் வெளியே வர முடியல. ஒவ்வொரு நாளும் தவிச்சுக்கிட்டிருந்த என்னை இப்போ என் மகனும் சேர்ந்து தவிக்கவிட்டுட்டுப் போயிட்டான்.

3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சோகம்

என்னோட ரெண்டு கண்ணையும் இழந்து தனி மரமா நிக்குறேன் இனி நான் என்ன செய்யப்போறேன்” என அவர் கதறிய காட்சி அங்கிருந்தவர்களை நெஞ்சம் கலங்க வைத்தது. இதேபோல் தன் 60 வயது அப்பாவை இழந்த மகள் ஒருவர், “உடம்பு சரியில்லைனுகூட நீ ஆஸ்பத்திரிக்கே போனதில்லையேப்பா… இப்ப மார்ச்சுவரியில கருகிக்கிடக்குற உன்னைப் பார்க்க கலெக்டர் வந்திருக்கார்… எழுந்திருச்சி வாப்பா. நான் வெளியிலதான் நிக்குறேன்… நீ வந்தாதான் போவேன் வாப்பா” என தன் அம்மாவைக் கட்டிக்கொண்டு கதறி அழுதது இதயம்வலிக்கச் செய்த காட்சி. எதிர்பாரா இந்த விபத்து ஏற்படுத்திய பாதிப்பில் தஞ்சை மாவட்டமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.