விக்ரம்: 80களில் கமல் – சுஜாதாவின் ஒரு பேன் இந்தியா முயற்சி; ஒருவேளை மணிரத்னம் இயக்கியிருந்தால்?!

ஹாய்… ஹலோ நண்பர்களே… ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன். ஆம். எண்பது மற்றும் தொன்னூறுகளில் வெளியான திரைப்படங்களைப் பற்றிய `நாஸ்டால்ஜியா கொண்டாட்டத் தொடர்’ மீண்டும் ஆரம்பிக்கிறது. இது சீசன் 2. வழக்கம் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids

ஒட்டுமொத்த தமிழ்நாடே அடுத்த மாதம் வெளியாகவிருக்கிற விக்ரம் (2022)–க்காக விழிவைத்து காத்துக்ழ் கொண்டிருக்கும் போது நாம் ராக்கெட்டில் ஏறி ரிவர்ஸ் கியர் போட்டு (ராக்கெட்டில் ரிவர்ஸ் கியர் உண்டா?!) 1986-ல் இதே தலைப்பில் கமலின் நடிப்பில் வெளியான, ‘விக்ரம்’ திரைப்படத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம். ‘பழைய’ விக்ரமானது, 29 மே 1986 அன்று வெளியானது. அந்த வகையில் இந்தத் திரைப்படம் 36 வருடங்களைக் கடக்கப் போகிறது. இப்படியொரு திரைப்படம் வந்ததைப் பற்றி 2K கிட்ஸ் லேசுபாசாக அறிந்திருப்பார்கள் என்றாலும் அப்போது என்னவெல்லாம் நடந்தது என்பதை இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விக்ரம்

தமிழில் ஒரு யோக்கியமான ஜேம்ஸ்பாண்ட் முயற்சி?!

ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தனது முதல் தயாரிப்பான ‘ராஜபார்வை’ திரைப்படத்தை வெளியிட்டார் கமல்ஹாசன். (இந்தப் படத்தைப் பற்றி இதே தொடரில் முன்பே பேசியிருக்கிறோம்) ராஜபார்வை வணிகரீதியாக தோல்வியடைந்திருந்ததால் சற்று தயக்கத்தில் இருந்த கமல்ஹாசன், தனது அடுத்த தயாரிப்பை ‘கமர்ஷியல் ஹிட்’ ஆக்க வேண்டுமென்று உறுதி பூண்டார். அதற்காக வழக்கமான பாணியில் ‘காமா சோமா’வென்று ஒரு கிளிஷேவான படத்தை எடுத்து கல்லா கட்ட அவர் முயலவில்லை. அவரின் அனைத்து வகையான புதிய முயற்சிகளை இதிலும் பார்க்க முடியும்.

தமிழில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான படத்தை யோக்கியமாக முயன்று பார்த்தால் எப்படியிருக்கும்?! கமல் இப்படியாக யோசித்தார். ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்கிற செல்லப்பெயர் கொண்ட நடிகர் ஜெய்சங்கரின் சில திரைப்படங்கள் இதற்கு முன்னால் அப்படி சி.ஐ.டி. வேலை பார்த்தவைதான். ஆனால் அவை தமிழ் சினிமாவின் சராசரி இலக்கணத்தில் இருந்து பெரிதும் மீறாமல் ‘டுஷ்யூம்… டுஷ்யூம்’ சத்தங்களில் இருந்து வெளியே வராதவை. எனவே தமிழில் ஒரு உண்மையான ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்டைக் கொண்டு வர முயன்றார் கமல்.

கமல், சுஜாதா

அவர் உடனே அழைத்தது, தனது நண்பரும் எழுத்தாளருமான சுஜாதாவை. ‘தமிழ் சினிமா ஒரு ஸ்டெரெச்சர் கேஸ். இப்போதைக்கு நான் படமெடுப்பதாக இல்லை’ என்று ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் தேய்வழக்கு பாணியை ரகளையாகக் கிண்டலடித்து எழுதியவர் சுஜாதா. என்றாலும் கமலின் பரிசோதனை ஆர்வம் சுஜாதாவையும் உடனே பற்றிக் கொண்டது. “கமல்… சிங்கப்பூர் ஜெட்ல இருந்து ஒரு புது மாருதி கார் கடல்ல விழணும். சாத்தியமா?” என்று சுஜாதா கேட்க “நீங்க சொல்லிட்டே வாங்க. எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் திரையில் காண்பிச்சுடுவோம். இந்தப் படத்துல எனக்கு ஒரு பைசா கூட லாபம் வேணாம். டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் கொடுக்கற பணத்தை அப்படியே இறைச்சுடுவோம்” என்று கமல் சொல்ல தன் கற்பனையை இன்னமும் உற்சாகமாக விரிவாக்கினார் சுஜாதா.

கமல் + சுஜாதா + ராஜசேகர் = குழப்பமான கூட்டணி

இந்தப் படத்தை இயக்குவதற்காக ராஜசேகரை அழைத்தார் கமல். கனவு சினிமா வேறு, பிசினஸ் வேறு என்கிற நடைமுறை இலக்கணத்தைத் துல்லியமாக அறிந்தவர் கமல். என்னதான் கதை, திரைக்கதையை நேர்மையாக எழுதிவிட்டாலும், அதை வெற்றிப்படமாக்குவதற்கு ஓர் அசாதாரண திறமை தேவையிருக்கிறது. ஒரு சராசரி வெகுசன பார்வையாளன் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களும் ஒரு திரைப்படத்தில் இருந்தால்தான் அது ‘ஹிட்’ ஆகும். மேலும் இயக்குநர் பணி என்பது மிகுந்த உழைப்பையும் நேரத்தையும் கோருகிற விஷயம். ஹீரோவாக பிஸியாக இருந்த கமல், அப்போது இந்தக் கூடுதல் சுமையை சுமக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். சில பல திரைப்படங்களுக்கு அவர் திரைக்கதை எழுதியிருந்தாலும் இயக்குநர் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்து விடுவதை நிறைய பார்த்திருக்கிறோம். எனவே இயக்குநர் ராஜசேகர் ‘விக்ரம்’ பிராஜக்ட்டினுள் வந்தார். ஆனால் இந்தத் தேர்விற்காக கமல் பின்னால் வருந்த வேண்டியிருந்ததைப் பற்றி அப்புறம் பார்ப்போம்.

விக்ரம்

ராஜசேகர் அப்போது சில பல ‘ஹிட்’ திரைப்படங்களை தந்த உற்சாக மிதப்பில் இருந்தார். ஐந்தாறு திரைப்படங்களும் கைவசத்தில் இருந்தன. இது போன்ற இயக்குநர்கள் திரைக்கதையின் நுணுக்கங்கள் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆக்ஷன், சென்ட்டிமென்ட், லவ் டூயட் என்று ஒரு ‘கமர்ஷியல் ஹிட்’ சினிமாவிற்கான அத்தனை அத்தியாவசிய கலவைகளையும் கூட்டுப் பொரியல் போல எப்படியாவது உள்ளே கொண்டு வந்துவிடுவார்கள். படம் கமர்ஷியல் கல்லா கட்ட வேண்டும் என்பதுதான் இவர்களின் அடிப்படையான நோக்கம். அது மட்டுமின்றி அவர் பெரும்பாலும் ரிமேக் படங்களைத்தான் இயக்குவார்.

இயன்ற வரை ஒரு வித்தியாசமான சினிமாவை உருவாக்க வேண்டும் என்கிற கனவுடன் சுஜாதா, கமல் ஆகிய இருவரும் ஒரு பக்கம். கமர்ஷியல் ஹிட்டை பிரதானமாக யோசிக்கும் இயக்குநர் இன்னொரு பக்கம். ஒருமாதிரி குழப்பமான கூட்டணி இது. எனவே சுஜாதா ஆரம்பத்தில் உத்தேசித்திருந்த திரைக்கதை மெல்ல மெல்ல அவுட்ஆஃப் போகஸில் மறைந்து, மூவருமே ஆளாளுக்கு அவரவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இழுத்ததில் மிஸைல், கம்ப்யூட்டர், RAW, சலாமியா என்கிற கற்பனை தேசம், டிம்பிள் கபாடியா என்கிற ராஜகுமாரி என்று ஒரு கலவையான திரைக்கதை உருவாகியது.

“முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?” என்பது போல் ‘தள்ளுங்கடா’ என்று சுஜாதாவும் இந்த அப்பட்டமான கமர்ஷியல் கோதாவில் குதிக்கத் துணிந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. ‘விக்ரம்’ என்கிற அதே பெயரில் இந்தக் கதை ஒரு வார இதழில் தொடராக வந்து கொண்டிருந்தது. அதை வாசித்துப் பார்த்தால் தெரியும். சுஜாதாவின் வழக்கமான பாணி பெரிதும் குலைந்து ‘சினிமா டிஸ்கஷனிற்கு’ ஏற்ப எப்படியெல்லாம் அந்தக் கதை மலைப்பாதை போல அபத்தமாக வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது என்கிற விஷயம். தொடர்கதை வெளிவந்து கொண்டிருந்த அதே வேளையில், இந்தக் கதை இன்னொரு பக்கம் திரைப்படமாகவும் மும்முரமாக வளர்ந்து கொண்டிருந்தது.

விக்ரம் – ஜேம்ஸ்பாண்ட் பாணியின் டெம்ப்ளேட்

இந்தத் திரைப்படத்தின் ஒன்லைன் என்பது எளிதானது. இந்திய தேசத்திற்குச் சொந்தமான ஒரு ஏவுகணையை பயங்கரவாதிகள் தீய நோக்கங்களுக்காக கடத்திக் கொண்டு சென்று விடுகிறார்கள். அதை நம் ஹீரோ மீட்டுக் கொண்டு வர வேண்டும். பெரும்பாலான சாகசத் திரைப்படங்களின் அதே அடிப்படையான வடிவம்தான் இதிலும் பின்பற்றப்பட்டது.

விக்ரம்

இது போன்ற ஆக்ஷன் படங்களின் ஹீரோ பல அசாதாரண திறமைகளைக் கொண்டிருப்பான். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் பணியில் வெறுப்புற்று விலகி தலைமறைவு வாழ்க்கையில் இருப்பான். திடீரென்று ஏற்படும் ஒரு பெரிய அழிவைத் தடுப்பதற்காக ஹீரோவின் தேவை அவசியப்படும். ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ என்பது மாதிரி அவனால் மட்டுமே இது சாத்தியப்படும். எனவே அவனை வலியுறுத்தி அழைப்பார்கள். சில சமயங்களில் நாயகனின் தனிப்பட்ட இழப்புகளும் கோபங்களும் இந்தச் சாகசத்தில் ஈடுபடுவதற்கான தூண்டுதல்களைத் தரும்.

விக்ரமிலும் இதேதான் நடக்கிறது. ஹீரோ ஒரு RAW ஏஜெண்ட். இவனின் தடாலடி அணுகுமுறைகள், அந்த அமைப்பில் உள்ளவர்களுக்குப் பிடிக்காததால் பணியிலிருந்து விலகியிருக்கிறான். இந்த நிலையில் ‘அக்னிபுத்திரன்’ என்று பெயர் சூட்டப்பட்ட ஏவுகணையை பயங்கரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அதை மீட்பதற்காக விக்ரமை அழைக்கிறார்கள். வர மறுக்கிறான். ஆனால் எதிரிகள் விக்ரமைக் கொலை செய்யும் முயற்சியில், விக்ரமின் கர்ப்பணி மனைவி (அம்பிகா) பரிதாபமாகச் செத்துப் போகிறாள். தனிப்பட்ட கோபம் + தேச நலன் ஆகிய இரண்டு ஆவேச காரணங்களுடன் ஏவுகணை வில்லனை நோக்கிக் கிளம்புகிறான் விக்ரம். அவனுடைய சாகசப் பயணத்தை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கிளிஷேக்களுடன் விவரிக்கிறது, இந்தத் திரைப்படம்.

எப்படியிருந்தார் நம்முடைய தமிழ் ஜேம்ஸ்பாண்ட்?

‘தமிழில் ஒரு ஹாலிவுட் பாணி்’ திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்கிற யோக்கியமான உத்தேசத்துடன் துவங்கப்பட்ட இந்தப் பிராஜக்ட், பல காரணங்களால் திசை மாறி தேய்வழக்கில் தன்னிச்சையாக சிக்கிக் கொண்டதை துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் இந்தத் திரைப்படத்தின் முதல் பாதியைக் கவனித்தால், உண்மையிலேயே ஓர் ஆரோக்கியமான சாகசத் திரைப்படத்தை இந்தக் கூட்டணி தர முயன்றிருப்பது தெரியும். ஆனால் எப்போது ‘சலாமியா’ என்கிற கற்பனை தேசத்திற்குள் இந்தப் படம் நுழைந்ததோ, அப்போதே துவங்கியது இதன் வீழ்ச்சி. மொழிபுரியாத அந்தத் தேசத்திற்குள் பார்வையாளர்களாகிய நாமும் திகைத்து நின்று அலைபாய வேண்டியிருந்தது.

விக்ரம்

இன்றைக்குப் பார்த்தால் ஒருவேளை காமெடியாகத் தெரியக்கூடிய செட்அப்கள் என்றாலும் எண்பதுகளிலேயே ஏவுகணை கடத்தல், சூப்பர் கம்ப்யூட்டர், அயல் பிரதேசம், பாலைவன சாகசம், எலிக்கோயில், ஒரிஜினல் போலவே தோன்றும் ஹைடெக் சாதனங்கள், துப்பாக்கிகள் போன்றவை பிரமிப்பூட்டும் விஷயங்களாக இருக்கும். இதற்காக ஜப்பானிலிருந்து ஒரு ஆப்பிள் கம்ப்யூட்டரை கமல் வாங்கி வந்திருந்தார். ராக்கெட் பற்றிய பல புத்தகங்கள் டிஸ்கஷன் மேஜையில் இறைபட்டன. இவற்றை வைத்து ‘அக்னிபுத்திரன்’ என்கிற ஏவுகணையை உண்மையாகக் காட்டுவதற்காக இந்தக் கூட்டணி நிறைய பாடுபட்டது.

அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா என்று இந்தி நட்சத்திரங்களையும் உள்ளே கொண்டு வந்திருந்தார் கமல். ஒருவேளை இந்தி டப்பிங் உள்ளிட்ட வணிகக் காரணங்களாக இருக்கலாம். அப்போதே ‘Pan India’ சினிமாவை உருவாக்கும் முன்னோடிகளில் ஒருவராக கமல் இருந்தார் என்று நைசாக சொல்லிப் பார்க்கலாமா? பிரேமில் பாதி இடத்தைக் கணிசமாக நிறைத்திருந்த அம்ஜத்கான், ‘காரே பூரே… கூ’ என்று சலாமியா தேசத்தின் ராஜாவாக புரியாத பாஷையைப் பேசிக் கொண்டிருந்தார். இந்தக் கற்பனையான பாஷையை படத்திற்காக கமலே ஸ்பெஷலாக உருவாக்கினார் என்பது ஒரு தகவல். இந்தப் படத்தில் டிம்பிள் கபாடியா இடம்பெறும் ‘மீண்டும் மீண்டும் வா…’ பாடல் அட்டகாசமானதொரு ஹிட்டானது. துணிச்சலான லிப்லாக் சீன் எல்லாம் அப்பாடலில் இடம்பெற்றிருந்தன.

மலையாளத்தில் சில திரைப்படங்களில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் லிஸ்ஸி தமிழில் அறிமுகமாகியது ‘விக்ரம்’ திரைப்படத்தில்தான். ஆனால் ஏனோ டைட்டில் கார்டில் கதாபாத்திரப் பெயரையே போட்டிருந்தார்கள். (ப்ரீதி). உண்மையில் இந்தப் பாத்திரத்திற்காக முதலில் நதியாவை நடிக்க வைக்க முயன்றார்களாம். ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்காத நிலையில், ஏதோ ஒரு படத்தின் காட்சியில் நதியாவின் பக்கத்தில் தோழியாக நின்றிருந்த லிஸ்ஸிக்கு அடித்தது அதிர்ஷ்டம். என்றாலும் லிஸ்ஸி தமிழில் அதிகம் நடிக்காதது, வெயில் காலத்தில் லஸ்ஸி கிடைக்காத சோகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

கமல், லிஸ்ஸி – அன்றும், இன்றும்

சலாமியா பாஷையை தமிழில் மொழிபெயர்க்கும் துபாஷியாக, பெண்மை மிளிரும் வேடத்தில் ஜனகராஜ் அசத்தியிருந்தார். ‘சுகிர்தராஜா’ என்னும் மெயின் வில்லனின் பாத்திரத்தை தனது பிரத்யேகமான நக்கலும் நையாண்டியுமான வசனங்களின் மூலம் சுவாரஸ்யப்படுத்தியிருந்தார் சத்யராஜ். “எந்த விலைமகள் மகன் ராக்கெட்டை கடத்திட்டுப் போனது?” என்று கேட்கும் லோக்கல் அரசியல்வாதியாக ஒரே காட்சியில் வந்தாலும் அசத்தியிருந்தார் வி.கே.ராமசாமி. சலாமியா மன்னரின் பதினெட்டாவது ராணி, ‘பள்ளத்தூர் ரமாதேவியாக’ ஓரமாக வந்து போனார் மனோரமா. இந்தப் படத்தில் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்த ‘தர்மசீலன்’ பிறகு ‘விக்ரம் தர்மா’ என்கிற ஸ்ட்ண்ட் மாஸ்டராக அறியப்பட்டார்.

ஒளிப்பதிவாளர் ரங்கா, ஆக்ஷன் காட்சிகளை பதிவு செய்வதற்காக ஹெலிகாப்டரில் தொங்குவது முதல் அவரே பல சாகசங்களை செய்திருக்கிறார் என்பது காட்சிகளைப் பார்த்தால் தெரிகிறது. கதையை எழுதிய சுஜாதா, கமலுடன் இணைந்து திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். ‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த அனுபவம் தொடர்பாக சுஜாதா எழுதியிருக்கும் சுவாரஸ்யமான கட்டுரை அவசியம் வாசிக்கப்பட வேண்டியது.

இளையராஜா என்னும் அற்புதம்

டெலிபோன் டைரக்டரியைத் தந்தால் கூட அதற்கு அற்புதமாக மெட்டுப் போட்டுவிடும் அளவிற்கு படைப்பாக்கத்தின் உச்சியில் அப்போது இருந்தார் இளையராஜா. ஒரு குத்துப்பாடலைக் கூட கவிதை போன்ற இனிமையான இலகுவுடன் ராஜாவால் மட்டுமே தர முடியும் என்பதற்கான உதாரணம் ‘எஞ்சோடி மஞ்சக்குருவி’ பாடல். அத்தனை ரகளையான கம்போசிஷன். டைட்டிலில் ஒலிக்கும் ‘விக்ரம்’ பாடலில் ஒரு Futuristic சாதனையை அப்போதே நிகழ்த்தியிருப்பார் ராஜா. இன்றைக்குக் கேட்டாலும் அத்தனை புத்துணர்ச்சியான, இளமையான பாடல். சிந்தசைஸர் உதவியுடன் நிறைய வாத்தியங்கள் ஒலிப்பது போன்ற மாயாஜாலத்தை நிகழ்த்தியிருப்பார். ‘வனிதாமணி’ போன்ற அற்புதமான பாடல்களைப் போலவே பின்னணி இசையிலும் ராஜாவின் கைவண்ணம் பல இடங்களில் வயலின்களின் வழியாக பிரகாசிக்கும்.

விக்ரம்

“…பொறுப்பது புழுக்களின் இனமே, ஆம் அழிப்பது புலிகளின் குணமே” என்று பாடல் வரிகளில் உணர்ச்சியின் தீவிரத்தை தகிப்புடன் கடத்தியிருப்பார் வைரமுத்து. (இது போன்ற வரிகள் இருந்தால் அப்போது இலங்கை வானொலியில் ஒலிபரப்ப மாட்டார்கள்). ‘மீண்டும் மீண்டும் வா…’ பாடலில் வாலியின் இளமையான வரிகள் வழக்கம் போல் விரக தாப ஏக்கங்களுடன் பதிவாகியிருக்கும். ‘எஞ்சோடி மஞ்சக்குருவியை’ எழுதியவர் கங்கை அமரன்.

விக்ரம் என்கிற முன்னோடி முயற்சி

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஆங்கில ஆக்ஷன் திரைப்படங்களுக்கு இணையானதொன்றை தமிழில் தந்துவிட வேண்டும் என்கிற கமலின் ஆர்வமும் தீவிரமும் இந்தப் படத்தைப் பார்த்தால் புரியும். ஆனால் ஒரு திரைப்படம் என்பது பல்வேறு கூட்டணிகளின் மூலம் அமைவது. இந்தக் கலவையின் வழியாக உருவாகும் படைப்பு என்பது எப்போது வெற்றி பெறும், எப்போது தோல்வி அடையும் என்பதை யூகிக்கவே முடியாது. “’இந்த சினிமா ஜெயிக்கும்’ன்னு ஒருத்தரால முன்னாடியே உத்தரவாதமா சொல்ல முடியும்னா கோடி ரூபா சம்பளம் கொடுத்து அவரை வேலைக்கு வெச்சுப்போம்” என்று கமல் ஒருமுறை சொல்லிருந்தது நினைவிருக்கிறது.

அந்த வகையில் ‘விக்ரம்’ ஒரு சிறந்த முன்னோடி முயற்சி என்கிற வகையில் பாராட்டத்தக்கது. ஆனால் கமல் + சுஜாதாவின் யோக்கியமான ஆர்வம், அதற்கு எதிர்திசையில் பயணித்த இயக்குநர் ராஜசேகரின் வெகுசனத் திறமை என்பது போன்ற இழுபறியான காரணங்களாலும் சலாமியா பாலைவனம், ஒட்டகம், பாம்புக்கடி காதல், குழப்பமான கிளைமாக்ஸ் என்று திக்குத் திசை தெரியாமல் பயணித்ததாலும் இதை ஒரு சிறந்த படம் என்று இப்போது சொல்ல முடியவில்லை. ஆனால் கமல் இப்போது நகர்ந்திருக்கும் இடத்தைக் கவனித்தால் இதற்கான விதைகளை ‘விக்ரமில்’ காண முடியும். அதே சமயம், படம் வியாபார ரீதியாகவும் பெருவெற்றி பெற்றது என்பதை மறுப்பதற்கில்லை.

விக்ரம்

இந்தப் படம் தொடர்பான இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் இருக்கிறது. கமல், ‘ராஜபார்வை’யை முடித்து நிமிர்ந்த சமயத்தில்தான் மணிரத்னத்தின் அறிமுகம், நடிகர் கிட்டியின் மூலம் அவருக்குக் கிட்டியிருக்கிறது. மணிக்கு சினிமா மீது இருந்த அசலான ஆர்வத்தை கமல் கண்டுகொண்டார். ‘காட்பாதர்’ போன்றதொரு சிறந்த படத்தைத் தமிழில் கொண்டு வர முடியுமா என்று இருவருமே நிறைய பேசியிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் ‘விக்ரம்’ திரைப்படத்தின் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மணிரத்னம் சில திரைப்படங்களை ஏற்கெனவே இயக்கியிருந்தாலும், ‘விக்ரம்’ போன்ற பெரிய கமர்ஷியல் பிராஜக்ட்டை அவரால் கையாள முடியுமா என்கிற தயக்கம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே ராஜசேகர் வந்தார். ஒருவேளை ‘விக்ரம்’ திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தால், இந்த முயற்சி இன்னமும் கூட தரமானதாக, ஆரோக்கியமானதாக அமைந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

1986-ல் வெளியான ‘விக்ரமிற்கும்’ 2022-ல் வெளியாகவிருக்கும் ‘விக்ரமிற்கும்’ தலைப்பு மற்றும் தீம் இசையைத் தவிர வேறு எதுவுமே தொடர்பில்லை என்று லோகேஷ் கனகராஜ் சொல்லியிருப்பது பெரிய ஆறுதல். இன்னொரு ‘சலாமியா காமெடியை’ தமிழ் சினிமா நிச்சயம் தாங்காது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.