உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ எப்படி இருக்கிறது? ஸ்டாலின் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவு சார்பில், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற ‘தலித் உண்மைகள்’  புத்தக அறிமுக விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’புத்தகம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அரசியலமைப்பு சட்டம் எந்தளவு செயல்பாட்டில் உள்ளது என்பதை ராஜூ’ அலசி ஆராய்ந்துள்ளார். முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை 13 பேரின் கட்டுரையும் கருத்து பெட்டகமாக அமைந்துள்ளது.

பட்டியலின,பழங்குடியின மக்களுக்கு, அரசியல் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய வாக்குறுதிகளைத் நிறைவேற்றி இருக்கக்கூடிய கட்சி திமுக தான்.

1971-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் அமைந்த ஆட்சிதான், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டில் இருந்து, 18 விழுக்காடாக நிறைவேற்றிக் கொடுத்தது. 2009-ல் அருந்ததியின மக்களுக்கு உள்ஒதுக்கீடாக மூன்று விழுக்காடு வழங்கியதும் திமுக ஆட்சிதான்.

நாட்டிலேயே முதலாவதாக டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகத்தை அமைத்ததும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான்.

‘பெண் சிங்கம்’ படத்தில் கருணாநிதி எழுதிய கதை வசனத்திற்கு கிடைத்த 50 லட்சத்துடன், தனது பணத்தையும் சேர்த்து 61 லட்சத்து 5 ஆயிரத்தை பொறியியில் படித்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கருணாநிதி வழங்கினார். 

திரைப்பட இயக்குனர் ரஞ்சித் இந்தியாவில் தலித் சினிமா என்ற கட்டுரையில், சமூக ஆதிக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்கத் திரைப்படங்கள் அமைந்திருந்ததை இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், திமுக காலம் என்பது, அத்தகைய முற்போக்கு புரட்சிக் கருத்தியல் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிய காலமாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கருணாநிதியின் ‘ஒரே ரத்தம்’ படத்தில் நந்தக்குமாராக நானும் நடித்தேன். கதாபாத்திரத்தின் பெயரே நான் யார் என்பதை எடுத்து சொல்லும்.

அண்ணா, கலைஞர் இப்படி ஏராளமானவர் திரைத்துறையில் பழமைவாதத்திற்கு எதிராக முற்போக்குக் கருத்துக்களை கையாண்டு இருக்கிறார்கள். இப்போது அவர்கள் வழியில் நானும் அந்தப் பணியில் ஈடுபட்டு இருக்கிறேன்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கி, என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அந்தப் படத்தை நான் பார்த்தேன். பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்தும், அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக வழங்கியிருக்கக்கூடிய உரிமைகள் குறித்தும் அந்தத் திரைப்படம் பேசியிருக்கிறது.

மதவாத ஆதிக்க சக்திகளை எதிர்க்க, நமது உரிமைகளை உரக்கப் பேசும் பகுத்தறிவுக் கருத்துக்கள் நிரம்பிய திரைப்படங்களைத் திரைத்துறையினர் எடுக்க வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டம்தான் சமூக தீமைகளுக்கான தீர்வாக அமைந்திட முடியும். தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு, அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளைப் பிசகாமல் நிறைவேற்றி வருகிறது, தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.