திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களில் “டெங்கு” தீவிரம்

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு வீரியம் அதிகரிப்பு உயர் சிவப்பு வலயங்களாக திருகோணமலை,கிண்ணியா,மூதூர்,உப் புவெளி,குச்சவெளி முதலான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.

திருகோணமலை பகுதியில் 203 பேரும், மூதூரில் 203 பேரும், கிண்ணியாவில் 77பேரும் ,உப்புவெளியில் 76பேரும்  டெங்கு நோயாளர்ளாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.கிண்ணியா சுகாதார பிரிவில் ஒருவர் டெங்கு நோய் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்துள்ளார்.

திருகோணமலை சுகாதார பணிமனையில் இன்று (21) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே வைத்தியர்  வீ.பிரேமானந்த் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

“காய்ச்சல் ஏற்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாட வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் “பிரதிப் பணிப்பாளர்  பொது மக்களை கேட்டுக்கொண்டார்

கொடிய நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும். வீடுகள் காணிகளை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுத்தப்படாத மலசல கூடங்களில் நீர்தேங்காத வண்ணம் சுத்தப்படுத்துவதுடன் தமது தரிசு காணிகள் தொடர்பிலும் கூடுதல்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகள் அரச திணைக்களங்களில் தினசரி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சுத்தத்தை பேண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மே 18 தொடக்கம் 24 வரை டெங்கு ஒழிப்பு வாரத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. சுகாதார தரப்புடன் முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பு பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை “அனைவருமாக ஒன்றினைந்து டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டு”மென மட்டக்களப்பு மாவட்ட  பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன் , அந்த மாவட்ட  மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துவருவதைக் கருத்திற் கொண்டே பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன் இவ்வாறு குறிப்பிட்டார்.

டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த 5 மாதங்களுக்குள் 422 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், 2 இளவயது மரணங்களும் இடம்பெற்றுள்ளன.  மட்டக்களப்பு நகர் பகுதியில் மாத்திரம் 240 பேர் டெங்கு நோயாளர்களாக அடயாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு ,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு கள விஜயம் ஒன்றினூடாக பார்வையிட்டதுடன், டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்களாக இதன்போது இனங்கண்ட பாடசாலை நிருவாகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அடுத்த கள விஜயத்தின் போது டெங்கு பரவ வாய்ப்புள்ள இடங்கள் என இனங்கானப்பட்ட பகுதிகள் துப்பரவு செய்யப்படாவிட்டால் உச்சக்கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்..

மட்டக்களப்புமாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான, விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நேற்று முன்தினம் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆலோசனைக்கு அமைவாக சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டன.

பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிக்கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்குநுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக  வைத்திருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.