தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தூப்பாக்கிச்சூடு நடந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. இதுதொடர்பான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, சி.பி.ஐ விசாரணை அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018-ல் மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
image
அப்போது நடைபெற்ற கலவரத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.
ஒரு நபர் ஆணையம் சார்பிலான முழு அறிக்கை, நான்கு தினங்களுக்கு முன்னர் (மே 18) முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முழு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது ஒருநபர் ஆணையம்
இந்நிலையில், இந்நிகழ்வின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Aruna-Jagadeesan-interview-after-submitting-3000-page-report-to-Chief-Minister
இதனால் பாதுகாப்பு கருதி சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டுமன்றி, மாவட்டம் முழுக்க சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து வெளிமாவட்டத்தினர் வருகை குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
முன்னதாக நேற்றைய தினம் “தூத்துக்குடி ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூடு நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. விசாரணை கமிசன்கள், சிபிஐ விசாரண அனைத்தும் முடிவுக்கு வந்து அறிக்கையும் சமர்பித்து விட்டார்கள். ஆனால், இதுவரை படுகொலைகளுக்கு காரணம் யார் என்று அடையாளம் காட்டப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை” என்று ஸ்டெர்லைட் போரட்ட குழுவைச் சேர்ந்த பாத்திமா பாபு குற்றம்சாட்டியிருந்தனர்.
தொடர்புடைய செய்தி: ’4 வருடம் ஆச்சு; படுகொலைக்கு காரணமானவர்கள் கண்டறியப்படவில்லை’ – ஸ்டெர்லைட் போராட்ட குழு
அதேநேரம் கடந்த 18-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்த பின் அருணா ஜெகதீசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பொறுத்தவரை விசாரணை வெளிப்படையாகவும், அதே நேரத்தில் அதன் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் விதமாகவும் இருந்தது. அதனால் இந்த விசாரணையில், ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக சில பாகங்கள் கொண்ட அறிக்கையை அளித்துள்ளோம். மொத்தம் 3000 பக்கங்கள் கொண்டதாக இந்த அறிக்கை உள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.