ராஜீவ்காந்திக்கு சான்றிதழ் வழங்கும் தகுதி சீமானுக்கு கிடையாது: கே.எஸ் அழகிரி காட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

ராஜீவ் காந்தி புகைப்படத்திற்கு முன் மலர் அஞ்சலி செலுத்தியபின்பு, நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்டுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

“எங்களுடைய நினைவுகளில் என்றென்றும் நீடித்து நிற்கிற, ஒருநாளும் எங்களால் மறக்கமுடியாத ஒரு மாபெரும் தலைவர் யாரென்று சொன்னால் அது ராஜீவ் காந்தி அவர்கள் தான். தமிழர்களுக்கும் அவருக்கும் இருக்கிற பெரிய உறவு என்னவென்று சொன்னால், நம்முடைய மண்ணில் அவர் மரணமடைந்தது தான். எனவே அந்த நினைவுகள் எங்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. 

தலைவர் ராஜீவ் காந்தி இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதில் பெரிய பொறுப்பு ஏந்தியிருந்தார். அவர் காலங்களில் தான் அசாம் பேச்சுவார்த்தை, நாகர்களுக்கான ஒப்பந்தம், பஞ்சாபில் ஒப்பந்தம், காஷ்மீரின் இணக்கம், பாகிஸ்தானின் இணக்கம் ஆகிய பல்வேறு விதமான நிலைகளை எடுத்தவர் ஆவார். 

அவர் காலத்தில் விஞ்ஞான மேம்பாடு வேண்டும் என்பதற்காக தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள். இந்தியாவை 21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச்சென்ற மாபெரும் தலைவர் அவர். அவருக்கு சில பின்னடைவு ஏற்பட்டபோது கூட, சிறிதும் பாதிக்கப்படாமல் ஆட்சியை இழந்த நிலையிலும் கூட  சோர்ந்துபோகாமல் இருந்தார்.” என்று கூறுகிறார்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனின் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர். மே 19ஆம் நாள் வாயில் வெள்ளைத்துணி கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். இதற்கு கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

“சீமான் அவர்கள் வேடிக்கையாக பேசுவது வழக்கம்; அவர் பேச்சில் வேடிக்கை மட்டும் இருக்காது அறியாமையும் இருக்கும். யார் தியாகி, யார் கைக்கூலி, யார் பிறரிடம் கையேந்தி நிற்பவர் என்பதையெல்லாம் மக்கள் நன்கறிவர். எனவே, ராஜீவ் காந்திக்கு தற்சான்றிதழ் வழங்கும் இடத்தில் சீமான் போன்ற ஆட்கள் இல்லை. அவர்களெல்லாம் ஒரு சமூக கருத்தை சொல்வதற்கான தகுதி இல்லாதவர்கள் என்பது என்னுடைய கருத்து.

நான் யாரையும் குறை சொல்லவேண்டும் என்றோ அல்லது குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ விரும்பவில்லை ஆனால் அவர்களும் இதைப்போன்ற துடுக்கான பேச்சுகளை பேசி விளம்பரம் தேடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி இந்த தேசத்திற்கு செய்து தந்த  சாதனைகள் கொஞ்சம் அல்ல; இளைஞர் சமுதாயத்தை 21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்து சென்றவர் அவர்தான். 

இலங்கையில் இதுவரை மகத்தான சாதனைகளை செய்தவர் ராஜீவ் காந்தி தான். இலங்கை தமிழர்களுடைய அரைநூற்றாண்டு போராட்டம் என்பது வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைக்கவேண்டும்; அங்கு ஒரு தமிழ் மாநிலம் உருவாக்கவேண்டும் என்பது தான். சட்டபூர்வமாக அதற்கு ராஜீவ் காந்தி உதவினார். 

இந்திய விமானப்படை மூலமாக யாழ்ப்பாணத்தில் சிரமப்படுகின்ற தமிழர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கியவர் அவர். தமிழர்களுக்கென்று ஒரு மாநிலத்தை உருவாக்க சிங்களவர்களை வைத்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்தார். இலங்கை பாராளுமன்றத்தில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதெல்லாம் அவர்செய்த ஆக்கபூர்வமான செயல்கள். துடுக்குத்தனமாக யார் வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் பேசுவது எளிது. ஆனால், ராஜீவ் காந்தி அதை செய்யாமல் இலங்கை தமிழர்களின் உரிமையை பெற்றுத்தந்தார். 

என்னுடைய கேள்வி என்னவென்றால், ராஜீவ் காந்தி எதுவும் செய்யவில்லை என்று விமர்சிப்பவர்கள் இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் என்பது தான். 

விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுடன் தொடர்புடைய சில தலைவர்கள் என்னிடம் கூறியது என்னவென்றால், சீமானிற்கும் பிரபாகரனிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பது தான். சீமான் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதே இல்லை என்று கூறியிருக்கிறார்கள். 

மக்களுடைய அணைத்து பிரச்னைகளுக்கும் தமிழக காங்கிரஸ் போராடியிருக்கிறது. எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பெட்ரோல் விலை, டீசல் விலை மற்றும் கேஸ் விலை உயர்வுக்கு எதிராக பேசியிருக்கிறார்கள். அதைப்போல, தமிழகத்திலும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாங்கள் போராட்டம் நடத்தியிருக்கிறோம். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, எல்லா கிராமங்களிலும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியிருக்கிறோம்.

மேலும், பேரறிவாளனுடைய விடுதலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தமிழக காங்கிரஸுடைய கருத்து. உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் குற்றமற்றவர் என்றோ, பேரறிவாளனிற்கும் ராஜீவ் காந்தி கொலைக்கும் சம்மந்தம் இல்லை என்றோ தன்னுடைய தீர்ப்பில் கூறவில்லை. சட்டநுணுக்கங்களின் அடிப்படையில் ஆளுநர் நீண்ட காலம், காலம்தாழ்த்திவிட்டார் என்ற ஒற்றை வாதத்தின் அடிப்படையில், 142ஆவது பிரிவின் கீழ் அந்த வழக்கை கையாண்டிருக்கிறார்கள். 

உச்சநீதிமன்றம் தவறான பார்வையில் அதனை பார்க்கிறது என்பது எங்களுடைய கருத்து. இதன்மூலமாக என்ன நடக்கிறது என்றால், ஒரு கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் ஏதோவொரு காரணத்தால் விடுதலை பெறுவது என்பது இந்த சமூகத்தினுடைய சட்டஒழுங்கை கெடுத்துவிடும். யார் வேண்டுமென்றாலும், யாரை வேண்டுமென்றாலும் கொலை செய்யலாம் என்கிற சூழலுக்கு போகும். 

இந்திய விடுதலை போராட்டத்தின்போது, வன்முறையை கையாண்ட பகத் சிங்க் அஹிம்சைக்கு எதிராக கையாண்டுவிட்டார் என்பதனால், கடைசிவரை மகாத்மா காந்தி அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. இதுவே காங்கிரஸ் கட்சியின் சிறப்பம்சம். கொள்கை ரீதியாக என்றும் வென்றிருக்கிறோம். இவர்களைப்போல கொலைகாரர்களை, கலவரம் செய்பவர்களை ஆதரிப்பவர்கள் நாங்கள் அல்ல”, என்று கூறுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.