இந்திய தலித் பிஷப் கர்தினால் ஆகிறார்- ஆகஸ்டு மாதம் பதவி ஏற்பு விழா

வாடிகன்:

கத்தோலிக்க திருச்சபையில் போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையில் பதவி வகிப்பவர்கள் கர்தினால்கள்.

இவர்கள் தான் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வார்கள். கர்தினால்களில் அதிகமான வாக்குகள் பெறுகிறவர் தான் புதிய போப் ஆண்டவராக முடியும்.

கத்தோலிக்க திருச்சபை விதிகளின்படி 120 பேர் கர்தினால்களாக பதவி வகிப்பார்கள். அந்த வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 பிஷப்புகளை, கர்தினால்களாக பதவி உயர்த்தி போப் பிரான்சிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவர்களில் 2 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கோவா-டமான் மறை மாவட்ட பிஷப் பிலிப் நேரி அன்டோனியோ செபஸ்டாவ் டி ரொசாரியோ ஃபெராவ், ஐதராபாத் பிஷப் அந்தோணி பூலா ஆகியோர் தான் கர்தினால்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர மங்கோலியா, கானா, நைஜீரியா, சிங்கப்பூர், கிழக்கு திமோர், பராகுவே மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்தும் கர்தினால்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆகஸ்டு மாதம் 27-ம் தேதி வாடிகனில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் பதவியேற்பார்கள் என வாடிகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் பிஷப் அந்தோணி பூலா, கர்தினாலாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவுக்கு முதல் தலித் கர்தினால் கிடைத்துள்ளார்.

1961-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த அந்தோணி பூலா 1992 ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி பாதிரியாராக நியமிக்கப்பட்டார். அவர் 2021-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி ஐதராபாத் பேராயராக நியமிக்கப்பட்டார்.

குழந்தைப் பருவத்தில் சாதிய எண்ணம் கொண்டவர்களால் எப்படி தலித்துகள் மீது மோசமாக நடத்தப்பட்டார்கள் என்பதைப் பற்றி கடந்த காலங்களில் பிஷப் அந்தோணி பூலா பேசியிருக்கிறார்.

மறைந்த ஜான் மொலகடா இந்தியாவின் முதல் தலித் பிஷப் ஆவார். அவர் மே 5, 1977-ல் எலுரு மறை மாவட்டத்தின் பிஷப்பாக நியமிக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.