695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதம் எதிர்வரும் 08ஆம் திகதி

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 8ஆம் திகதி பி.ப 5.30 மணி வரை நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

அத்துடன், 2020ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளைகள் அன்றையதின விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படும் எனவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (02) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதேநேரம், எதிர்வரும் 07ஆம் திகதி முற்பகல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2022.04.09ஆம் திகதிய 2274/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் கடன் எல்லையை ஒரு ட்ரில்லியன் ரூபாவினால் உயர்த்துவதற்கு உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.

அதன் பின்னர் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட அறிவிப்பொன்று முன்வைக்கப்படவிருப்பதுடன், அது குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

ஜூன் 09ஆம் திகதி இலங்கை மின்சாரம் திருத்தச்சட்டமூலம் (இரண்டாவது வாசிப்பு) மற்றும் பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன. அதன் பின்னர் பி.ப 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

அதேநேரம், அண்மையில் இடம்பெற்ற குழப்பமான சூழ்நிலையின் போது படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தொடர்பான அனுதாபப் பிரேரணையை ஜூன் 10ஆம் திகதி மு.ப 10 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பாராளுமன்ற அமர்வுவாரத்தில் ஒவ்வொரு நாளும் பாராளுமன்றம் மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன் ஜூன் 10ஆம் திகதி தவிர ஏனைய நாட்களில் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மற்றும் பொது மனுக்கள் பற்றிய குழு போன்ற குழுக்களால் மீளாய்வுகளை மேற்கொள்ளும்போது பாராளுமன்றத்தில் அவற்றை பலப்பலப்படுத்துவதற்காக சபை முதல்வர் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் முன்வைத்த திருத்தங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 07ஆம் திகதி பி.ப 2.30 மணிக்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டத்தைக் கூட்டுவதற்கும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.

அதேநேரம், செலவீனங்களைக் குறைத்து சுற்றுச் சூழலுக்கு நட்பான முறையில் இலத்திரனியல்- அரசசேவையொன்றை உருவாக்குவதற்கு ஏற்ற வகையில் பாராளுமன்ற செயற்பாடுகளை கடதாசிப் பயன்பாடு இன்றி முன்னெடுத்துச் செல்வதன் அவசியம் குறித்த யோசனையை வலியுறுத்தி நிதி அமைச்சின் செயலாளர் அனுப்பியிருந்த கடிதம் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சகல அறிக்கைகள், ஆவணங்களின் இலத்திரனியல் பிரதிகள் (Soft Copies) பாராளுமன்ற இணையத்தளத்தில் விசேட இணைய போட்ரலில் (Web Portal) உள்ளடக்கி பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு வசதி செய்து கொடுப்பதற்கான வாய்ப்புக்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு குழு உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானத்தின் மூலம் கௌரவ சபாநாயகர் தேவையான பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

அத்துடன், பல்வேறு காரணங்களால் பாராளுமன்றத்தில் கேட்கப்படாதுள்ள வாய்மூல விடைக்கான 50 கேள்விகளுக்காக  ஜூலை மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பாராளுமன்ற தினமாக முழுநாளையும் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.