கவர்னர் மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

சேலம்:

சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாமக 2.0 என்ற புதிய செயல் திட்டத்தில் கல்வி , மேலான்மை, சுற்றுச்சூழல், போதை ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம் போன்றவைகளை முன் நிறுத்தி கட்சியை வழி நடத்துவேன், அதைபோலவே கட்சி நிர்வாகிகளும் நடந்துகொள்வார்கள்.

சேலத்தில் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளது. 20 ஆண்டுகாலமாக மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆண்டுதோறும் 40 டி.எம்.சி.யில் இருந்து 120 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் சிறிய அளவில் செயல்படுத்தப்பட்டது. அதை மேட்டூரில் இருந்து ஆத்தூர் வரை கொண்டு செல்ல திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

சேலம் மாநகர குப்பைகள் நாள்தோறும் 500 டன் குப்பைகள் எறியூட்டப்படுவது முட்டாள் தனம். குப்பைகளால் மாநகர மக்கள் பல ஆபத்தான விளைவுகளை சந்தித்து வருகின்றனர். குப்பைகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மது, போதை பொருட்கள், ஆன்லைன் மோசடி என மும்முனை தாக்குதல் நடைபெற்று வருகிறது. 9 மாதத்தில் 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பு வழங்கப்பட்டது. வேலை வாய்ப்பும் வழங்கவில்லை. எனவே அவர்களுக்கு நிலத்தை திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என தெரிவித்தார்கள்.

அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை இருந்தால் உடனடியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் கொண்டு வந்த நோக்கமே கல்வி வியாபாரம் ஆக கூடாது என்பதே, ஆனால் இந்தியா முழுவதும் 1 லட்சம் கோடிக்கு மேல் பயிற்சி நிறுவனங்கள் மூலம் மோசடி நடைபெறுகிறது,

அது போக மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் என கல்வி வணிகம் ஆக்கப்பட்டது.. நீட் தேர்வு வந்த பிறகும் தகுதியற்ற நபர்கள் கூட மருத்துவம் படிக்கும் அவலம் நிவிவருகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தில் கல்வி கட்டமைப்பை உருவாக்கவில்லை, அதனால் சிறிது காலம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஆளுநருக்கும் முதல்-அமைச்சருக்கும் சுமூக உறவு இருக்க வேண்டும். அதில் இருவரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும்.

தமிழகத்திற்கு சாபகேடாக அமைந்துள்ள மேகதாது அணையை எக்காரணம் கொண்டும் கட்டவிடமாட்டோம். தமிழகத்தில் அரசியல் செய்து வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று அதை தடுத்து நிறுத்துவாரா. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு மாற்று பா.ம.க.தான். பாரதிய ஜனதா கிடையாது.

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்றுவார்கள் என நம்பி தி.மு.க.விற்கு வாக்களித்தனர். ஆனால் அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் நிதி அமைச்சர் வெளிப்படையாக ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றமுடியாது என அறிவித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வன்னியர் சங்க மாநில செயலாளர் மு.கார்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், மாவட்ட செயலாளர்கள் ரத்தினம், விஜயராசா, ராஜசேகரன், பசுமை தாயக மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.