இலங்கை மத்திய வங்கி கவர்னர் நியமன விவகாரம்: கோத்தபய-ரணில் இடையே கருத்து வேறுபாடு

கொழும்பு:

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது.

பெட்ரோல்-டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயந்ததாலும், பற்றாக் குறையாலும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதையடுத்து அப்பொறுப்பை ரணில் விக்ரமசிங்கே ஏற்றார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-

மத்திய வங்கியின் தற்போதைய கவர்னர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்து தனது நண்பரான தினேஸ்வீரக்கொடிக்கு பதவியை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கோத்தபய ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்கே, நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

விக்ரமசிங்கேவின் பதிலால் கோத்தபய கோபம் அடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே பேச்சு வார்த்தையை ராஜபக்சே குடும்பத்தினர் உறவினர் திருகுமார் நடேசன் ஏற்பாடு செய்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். அதன்பின் புதிய அமைச்சர்களையும் நியமித்தார். ஏற்கனவே நாடு பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி கொண்டிருக்கும் வேளையில் கோத்தபய ராஜபக்சே-ரணில் விக்ரமசிங்கே இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.