சீனாவில் இதுக்கெல்லாம் விடுமுறையா…? முதலாளியின் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி

பீஜிங்,

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்த ஹெனான் மாகாணத்தில் பாங் டாங் லாய் என்ற பெயரிலான சில்லரை வர்த்தக விற்பனை செய்யும் சூப்பர்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் கிளை பரப்பி செயல்பட்டு வரும் இதன் நிறுவனர் யூ டாங் லாய்.

சமீபத்தில், சீனாவில் சூப்பர்மார்க்கெட் பிரிவை மேம்படுத்தும் நோக்கில் 6 நாள் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் டாங் லாயும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, வேலையில் இருக்கும் ஒவ்வொரு பணியாளருக்கும் சுதந்திரம் வேண்டும் என நான் விரும்புகிறேன்.

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியற்ற தருணம் வரும். அப்படி நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையெனில் வேலைக்கு வரவேண்டாம் என கூறினார். இதன்படி, ஊழியர்கள் தங்களுக்கான ஓய்வு நேரம் எதுவென்று அவர்களே முடிவு செய்து கொள்ள முடியும். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

வேலைக்கு வெளியே அவர்கள் அனைவருக்கும் போதிய ஓய்வு இருக்க வேண்டும் என்பது யூவின் விருப்பம். இந்த விடுமுறையை எடுக்க கூடாது என நிர்வாகம் மறுக்க முடியாது. மறுப்பது என்பது விதிமீறல் ஆகும் என பேசியுள்ளார். மகிழ்ச்சியற்ற தருணத்தில் விடுமுறை எடுக்கும் அவருடைய யோசனைக்கு சீனாவில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களிலும் வைரலானது.

அவர் ஒரு நல்ல முதலாளி. இந்த நிர்வாகத்தின் கலாசாரம் நாடு முழுவதும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் வெய்போ சமூக ஊடக பயனாளர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். இதேபோன்று மற்றொருவர், நான் டாங் லாய் நிறுவனத்திற்கு மாறலாம் என நினைக்கிறேன். எனக்கு மகிழ்ச்சியும், மதிப்பும் கிடைக்கும் என உணருகிறேன் என தெரிவித்து உள்ளார்.

2021-ம் ஆண்டு சீனாவில் பணியிடத்தில் கவலை ஏற்படுவது பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 65 சதவீத பணியாளர்கள் களைப்பாக உணர்வதுடன், வேலையில் மகிழ்ச்சியற்றும் உள்ளனர் என தெரிய வந்தது. குறைவான ஊதியம், பணியாளர்கள் ஒருவருக்கொருவர் இடையேயான சிக்கலான உறவுகள் மற்றும் கூடுதலான நேரம் பணியாற்றும் கலாசாரம் ஆகியவை எதிர்மறை உணர்வுகளை உண்டு பண்ண கூடிய காரணிகளாக கண்டறியப்பட்டன.

இந்நிலையில், 2023-ம் ஆண்டு யூ பேசும்போது, பல மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என சீனாவில் உள்ள முதலாளிகள் கூறி வரும் கலாசாரத்திற்கு எதிராக தன்னுடைய கண்டனங்களை வெளியிட்டார். இதனால், மற்றவர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அபகரிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

அவருடைய வேலைவாய்ப்புக்கான கொள்கைகள் என எடுத்து கொண்டால், நாள் ஒன்றுக்கு, ஊழியர்கள் 7 மணிநேரமே வேலை செய்ய வேண்டும். வார விடுமுறை வழங்க வேண்டும். ஆண்டுக்கு 30 முதல் 40 நாட்கள் விடுமுறை மற்றும் சந்திர புதுவருடத்தின்போது, 5 நாட்கள் விடுமுறையும் அளிக்க வேண்டும் என தெரிவிக்கின்றது.

அவருடைய நிறுவனத்தின் வருங்காலம் பற்றி யூ பேசும்போது, நாங்கள் பெரிய பணக்காரராக வேண்டும் என விரும்பவில்லை. எங்களுடைய ஊழியர்கள் ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும். அதனால், நிறுவனமும் வளரும் என கூறுகிறார்.

சுதந்திரமும், அன்பும் தன்னுடைய தத்துவங்கள் என டாங் லாய் கூறுகிறார். அவருடைய நிறுவன பணியாளர்களின் மாத சராசரி வருவாய் இந்திய மதிப்பில், ரூ.80 ஆயிரத்து 900 ஆக உள்ளது. 2019-ம் ஆண்டு சீனாவில் சில்லரை பணியாளர்களின் சராசரி வருவாய் ரூ.41 ஆயிரத்து 65 ஆக இருந்தது.

இவருடைய நிறுவனம் 13 இடங்களில் பரவியுள்ளன. 29 ஆண்டு வரலாற்றில் வாடிக்கையாளர் சேவையில் சிறந்த தரத்துடன் செயல்பட்டு நாடு முழுவதும் நல்ல பெயரை ஈட்டியுள்ளது. டாங் லாயின் சூப்பர்மார்க்கெட் நுழைவு பகுதியில் வளர்ப்பு பிராணிகளுக்கு தண்ணீர் வழங்க மற்றும் குளிர்விக்க சாதனங்களும் உள்ளன. ஏ.சி. சுத்தப்படுத்துதல், கைப்பை பராமரித்தல் உள்பட 100 இலவச சேவைகளையும் அவர்கள் வழங்குகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.