ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதி ஆட்டங்கள் – இன்று தொடக்கம்

பெங்களூரு,

இந்தியாவின் பிரதான முதல்தர போட்டியான ரஞ்சி கிரிக்கெட் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 38 அணிகள் பங்கேற்ற 87-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக லீக் சுற்று நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐ.பி.எல்.-ல் நிறைவடைந்த நிலையில் ரஞ்சி போட்டிக்கான கால்இறுதி ஆட்டங்கள் இன்று (திங்கட்கிழமை) பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்குகிறது. பெங்களூருவின் ஆலுரில் நடக்கும் ஒரு கால்இறுதியில் 41 முறை சாம்பியனான மும்பை அணி, ஜெய் பிஸ்தா தலைமையிலான உத்தரகாண்டை (5 நாள் ஆட்டம்) எதிர்கொள்கிறது. பலம் வாய்ந்த மும்பை அணியில் கேப்டன் பிரித்வி ஷா, ஜெய்ஸ்வால், அர்மான் ஜாபர், சர்ப்ராஸ்கான், ஆதித்ய தாரே, பந்து வீச்சாளர்கள் தவால் குல்கர்னி, ஷம்ஸ் முலானி, துஷார் தேஷ் பாண்டே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதனால் மும்பை ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

களம் காணும் மந்திரி

கர்நாடகா- உத்தரபிரதேச அணிகள் இடையிலான மற்றொரு கால்இறுதி ஆட்டம் பெலகவியில் தொடங்குகிறது. மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணியில் மயங்க் அகர்வால், தேவ்தத் படிக்கல், கருண் நாயர், ஸ்ரோயஸ் கோபால் போன்ற முன்னணி வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். சர்வதேச போட்டி காரணமாக லோகேஷ் ராகுல், பிரசித் கிருஷ்ணா இடம் பெறவில்லை. உத்தரபிரதேச அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தலைமையில் மிரட்ட காத்திருக்கிறது. ரிங்கு சிங், யாஷ் தயாள், ஷிவம் மாவி, பிரியம் கார்க், அக்‌ஷ்தீப் நாத் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.

இன்னொரு கால்இறுதியில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணி, சவுரப் திவாரி தலைமையிலான ஜார்கண்டுடன் மோதுகிறது. பெங்கால் அணியில் மேற்கு வங்காள விளையாட்டுத்துறை மந்திரி மனோஜ் திவாரி ஒரு பேட்ஸ்மேனாக அணியில் தொடருகிறார். 3 முறை இறுதி ஆட்டத்தில் தோற்று விட்டேன். ரஞ்சி கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்ற வேட்கை இன்னும் தனக்குள் கொழுந்து விட்டு எரிவதாக அவர் கூறியுள்ளார்.

மழையால் பாதிக்குமா?

4-வது கால்இறுதியில் பஞ்சாப்- மத்திய பிரதேச அணிகள் சந்திக்கின்றன. இதில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக சதம் அடித்து கலக்கிய ரஜத் படிதார் மத்தியபிரதேச அணியின் துணை கேப்டனாக அடியெடுத்து வைக்கிறார். அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனைத்து ஆட்டங்களும் காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பெங்களூருவில் அடுத்த சில நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் கால்இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. முடிவு கிடைக்காமல் போனால் லீக் சுற்றில் பெற்ற ரன்ரேட் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் அரைஇறுதி வாய்ப்பு வழங்கப்படும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.