வணிகர் சங்க நிர்வாகி கொலை ; கடைகளை அடைத்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் அப்பகுதி வணிகர்களை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த வணிகர் சங்க நிர்வாகி சிகிச்சைப் பலனின்றி இறந்ததை அடுத்து கரந்தை பகுதியில் இருநூறுக்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையான ரவுடி கும்பல் ஒன்று கடந்த 9-ம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் மின் வெட்டைப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள மளிகை கடை, மருந்துக் கடை என கடை கடையாக ஏறி வீச்சாரிவாளைக் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்தது.

சம்பவத்தன்று கரந்தை ராஜாராமன் மடத்து தெருவைச் சேர்ந்த செந்தில்வேல் (75) என்பவரது தனது மளிகை கடையில் இருந்தார். அப்போது கஞ்சா போதையில் ஸ்கூட்டரில் வந்திறங்கிய 2 பேர் செந்தில்வேலின் கடைக்கு சென்று அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.  அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த ரவுடி கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. இச் சம்பவத்தில் காயமடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல அதனருகில் இருந்த மருந்து கடைக்குள் புகுந்த அந்த ரவுடி கும்பல் அங்கிருந்த ஊழியர் முருகானந்தம் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு கல்லாவில் இருந்த ரூ.2,500ஐ கொள்ளை அடித்துச் சென்றுவிட்டது.இக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மருந்துக் கடை ஊழியர் முருகானந்தம்  கொடுத்த புகாரின்பேரில், தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து,  அப்பகுதியில் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து அதே பகுதியைச் ஹரிஹரன் (21) என்ற இளைஞரையும், அவரது கூட்டாளியான 16 வயது சிறுவன் ஒருவரையும் கைது செய்தனர்.அப்போது ஹரிஹரன் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் ரவுடிகளால் வெட்டப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வியாபாரி செந்தில்வேல் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை பரிதாபமாக இறந்தார்.

உயிரிழ்ந்த செந்தில்வேல் கரந்தை பகுதியின் வணிகர் சங்க பேரமைப்பின் பொருளாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கெனவே கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து விசாரணை  நடத்தி வந்த போலீஸார் தற்போது அதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் இருவரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.இதற்கிடையே, ரவுடிகளால் வெட்டப்பட்ட வணிகர் சங்க நிர்வாகி  செந்தில்வேல் சிகிச்சைப் பலனின்றி இறந்ததைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இதுபோல மாமூல் கேட்டு வியாபாரிகளை தாக்கும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரந்தை பகுதியில் வணிகர்கள் இன்று காலை இருநூறுக்கு மேற்பட்ட கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி: எஸ்.இர்ஷாத் அஹமது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.