இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம் , திட்டங்கள் தொடர்பில் ஆராய கோப் குழுவை விசேடமாகக் கூட்டுவதற்குத் தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஆராய கோப் குழுவை எதிர்காலத்தில் விசேடமாகக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மின்சார சபையின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் தலைமையில்  (21) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் (கோப் குழு) கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 10ஆம் திகதி இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு மின்சார சபை அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அன்று போதிய நேரம் இன்மையால் பல விடயங்கள் குறித்தக் கலந்துரையாட முடியாமல் போயிருந்தது.

இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கொள்வனவு, விநியோகம் மற்றும் அவற்றின் செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களில் முரண்பாடுகள் இருப்பதாக இங்கு கலந்துகொண்ட குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதனால், உற்பத்திக்கான திட்டங்கள் உள்ளிட்ட  சகல விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்கு தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்றத்தையும், சபாநாயகரையும் அறிவுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோப் குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் ஆராய கோப் குழுவின் விசேட கூட்டத்தைக் கூட்ட முடியும் எனவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம், இந்த விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்குக் குழுவின் உறுப்பினர்கள் இணங்கியதுடன், கோப் குழுவின் விசேட கூட்டத்தைக் கூட்டி இது பற்றி ஆராய்வதற்குத் தீர்மானித்தனர்.

அத்துடன், 2008 நவம்பர் 14ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானம் மற்றும் 2009 மே 26ஆம் திகதிய 39ஆம் இலக்க நிர்வாக சேவைச் சுற்றுநிருப ஏற்பாடுகளுக்கு எதிராக பணிப்பாளர் சபையின் அனுமதிக்கு அமைய மின்சாரசபைக்கு அவ்வப்போது வெவ்வேறு பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு அமைய  2021ஆம் ஆண்டில் 2,134.9 மில்லியன் ரூபாவும், 2020ஆம் ஆண்டில் 1,544.4 மில்லியன் ரூபாவும் இவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது. இந்தப் பணம் பொது மக்களின் பணம் என்பதால் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். கொடுப்பனவுகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் சில பிரிவுகள் நகைப்புக்குரியவை எனவும் அவர் தெரிவித்தார். உதாரணமாக மின் மானி வாசிப்புக்கு மேலதிகமாக மின்மானி வாசிப்பை சரியாக மேற்கொள்வதற்கும் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இறைவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகின்ற வருமானத்தைவிட இலங்கை மின்சார சபையின் வருடாந்த செலவீனம் காணப்படுவதாக கோப் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும், சம்பளத்தை மறுசீரமைக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் 2007 டிசம்பர் மாத அமைச்சரவையின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் 2015 மே மாதம் கூட்டு ஒப்பந்தமொன்று எட்டப்பட்டபோது உழைக்கும்போது செலுத்தும் வரியை (PAYE Tax), தனியாள் முற்பண வருமான வரி (APIT) போன்றவற்றுக்கான பொறுப்பை பணியாளர்களுக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டபோதும், இதற்கு மாறாக 2020 முதல் 2021 வருடம் வரை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து அந்தத் தொகையை அறவிடாமல் இலங்கை மின்சார சபையின் நிதியிலிருந்து 4.8 பில்லியன் (PAYE/APIT) வரி செலுத்தப்பட்டமையும் இங்கு தெரியவந்தது. இந்த வரி செலுத்தும் நடைமுறை தற்பொழுது இடைநிறுத்தப்பட்டிருப்பதாக இங்கு வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது நாட்டில் பெரும் பிரச்சினையாக உள்ளது என கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார். இறுதியில் இந்த பணம் நாட்டு மக்களின் பணத்தில் இருந்து செலுத்தப்பட்டது என்பது தெளிவாவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கூட்டு ஒப்பந்த வரைபின் அடிப்படையில் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் 2021 ஆம் ஆண்டில் 25% அதிகரித்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட தரப்பினர், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வரைபில் கையொப்பமிடாமையால் இது முடிவுக்குக் கொண்டுவரப்படாத கூட்டு ஒப்பந்த வரைபு என்பதால் சட்டபூர்வத் தன்மை கொண்ட ஆவணம் இல்லையென்பதும் தெரியவந்தது. இதன்படி, இந்த அங்கீகரிக்கப்படாத கொடுப்பனவு காரணமாக சபைக்கு ஏற்பட்ட பாதகமான விளைவு ஏறத்தாழ 9.6 பில்லியன் ரூபா என கோப் குழு விளக்கியது. இதனைப் பார்க்கும்போது இந்த நிறுவனம் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம் அல்ல என்பது போலத் தோன்றுவதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 2018-2034 நீண்டகால மின்சார உற்பத்தித் திட்டத்துக்கு அமைய சீதாவாக்க கங்கை நீர் மின்னுற்பத்தித் திட்டம் 2022ஆம் ஆண்டாகும்போது நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருந்தபோதும் 2020ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டத்துக்கு 301.19 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டிருந்த நிலையில் இது இடைநடுவில் நிறுத்தப்பட்டமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 301.19 மில்லியன் ரூபா செலவில் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோதும், சரியான முறையில் சாத்தியக் கூறுகள் மேற்கொள்ளப்படவில்லையென்பது புலனாவதாகக் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், இலங்கை  நிலக்கரி நிறுவனம் (LCC) ஊடாக வரையறுக்கப்பட்ட டொரியன் அயன் ஸ்டீல் கம்பனி லிமிடட் (TISCL) நிறுவனத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட  நிலக்கரியை பருவமழை காரணமாக அவற்றை இறக்க முடியாமல் போனமை, நீண்டகால உற்பத்தித் திட்டத்தின்படி திட்டமிடப்பட்ட பல்வேறு மின் நிலையங்கள் மற்றும் பல்வேறு வலுசக்தி மூலங்களிலிருந்து வருடாந்தம் புதிய மின் உற்பத்தியைப் பெறுவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.