‘தியேட்டரை விட்டு வரும்போது இதற்கு கியாரண்டி’-‘பன்னிகுட்டி’ படக்குழுவினரின் சுவாரஸ்யங்கள்

யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பன்னி குட்டி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், சில சுவாரஸ்யமான விஷயங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘கிருமி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுசரண். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘சுழல்’ வெப் சீரிஸின் இயக்குநர்களில் ஒருவராக அனு சரண் பணியாற்றியுள்ளார். அடுத்ததாக இவரது இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளப் படம் ‘பன்னி குட்டி’. யோகி பாபு, கருணாகரன், லியோனி, சிங்கம்புலி, ராமர், தங்கதுரை, லக்ஷ்மி ப்ரியா எனப் பலரும் இந்தப்படத்தில் நடித்ததுள்ளனர். ஒரு அழகான நகைச்சுவை கதையாக உருவாகியுள்ள இந்தப்படம், ஜூன் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் அனுசரண், நடிகர் கருணாகரன், ராமர், தங்கதுரை, லியோனி, நடிகை லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் கே கூறுகையில், “‘பன்னி குட்டி’ எனக்கு முக்கியமானப் படம். தொடர்ந்து சீரியஸான படங்களை செய்துகொண்டிருக்கும் வேளையில், இந்த படம் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்தப் படமாக இருக்கும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை” என்று தெரிவித்தார்.

image

அறிமுக நாயகி லக்‌ஷ்மி பிரியா பேசும்போது, “இந்தப் படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுடன் பணிபுரிந்தது பெரிய அனுபவம். படத்தின் என்னுடைய கதாபாத்திரம் அழகாக திரையில் கொண்டுவர ஒளிப்பதிவாளர் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார்கள். இது ஒரு நேர்மையான படம். எங்கள் படம் முழுமையாக தயாராகிவிட்டது, அதை பார்வையாளர்களிடம் நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ஷமீர் கூறும்போது, “படத்தை திரையரங்குக்கு கொண்டு வர உதவிய லைகா நிறுவனத்துக்கு நன்றி. சிறிய படங்களுக்கு, திரைக்கதை நன்றாக இருந்தால் தான், பெரிய நடிகர்கள் இல்லாமலும் அதை சிறப்பாக எடுக்க முடியும். அனுசரண் இயக்குநர் மட்டும் அல்ல, சிறந்த படத்தொகுப்பாளரும் கூட. கருணாகரன் சிறந்த நடிகர், அவர் ஏற்கும் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். இந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். சின்ன படங்களுக்கு நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும்” என்று அவர் கூறினார்.

image

திண்டுக்கல் ஐ லியோனி பேசுகையில், “இந்த படத்தின் மூலமாக 21 வருடத்திற்குப் பிறகு நடிப்பிற்கு திரும்ப வருகிறேன். இந்தப் படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் சாமியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை இயக்குநர் காரணமாக தான் என்னிடம் கொடுத்திருக்கிறார். எந்தவித பதட்டமும் இல்லாமல் இயக்குனர் அனுசரண் வேலைப்பார்ப்பார். கருணாகரனுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியாக இருக்கும். அனுசரண் நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவதில் திறமைக்காரர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்தப் படம் அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்கும் படமாக இருக்கும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள், நன்றி” என தெரிவித்தார்.

இயக்குநர் அனுசரண் கூறியதாவது, “எனக்கு வாய்ப்புக் கொடுத்த லைகாவிற்கும், ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும் போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். ரவி முருகையா உடைய கதை தான் இந்த ‘பன்னி குட்டி’. இந்த கதையை தயாரிப்பாளரிடம் கூறும்போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள். ஆனால் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்தக் கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நிஜ பன்னிகுட்டியுடன் படப்பிடிப்பை நடத்தினோம்.

image

அது மிகவும் கடினமாக இருந்தது. விலங்குகளை வைத்து எடுப்பது சாதாரண காரியம் இல்லை. பல நெருக்கடிகளை கடந்து, சில யுக்திகளை பயன்படுத்தி தான் படம் எடுத்தோம். உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும், அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கை தான் வாழ்கை என்பதை இந்தப் படம் கற்றுக்கொடுக்கும்.

நடிகர் கருணாகரன் பேசுகையில், “ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு கிடைக்கும் போது, அந்தக் கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவனா என்று யோசிப்பேன். இந்த கதையை இயக்குநர் கூறிய போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரங்கள் தான். இயக்குனர் உடைய பதட்டமில்லாத தன்மை, என்னை ஆச்சர்யபட வைத்தது. இசையமைப்பாளர் இந்தப் படத்தில் கொடுத்திருக்கும் இசை, ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். இந்தப் படம் நம்பிக்கை கொடுக்கும் படம். இந்தப் படத்தில் யோகிபாபு நடித்திருப்பது எங்களுக்கு சந்தோசம். படத்தை மக்களிடம் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

– பா.ஜான்சன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.